/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மத்துார் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டி முடித்தும் திறப்பதில் தாமதம்
/
மத்துார் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டி முடித்தும் திறப்பதில் தாமதம்
மத்துார் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டி முடித்தும் திறப்பதில் தாமதம்
மத்துார் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டி முடித்தும் திறப்பதில் தாமதம்
ADDED : மார் 07, 2025 02:12 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் மத்துார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லாமல் கல்வி கற்பதில் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து கடந்தாண்டு, நபார்டு வங்கி நிதி உதவி திட்டம் 2023-24ல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, 14 கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு, 3.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது.
தரைத்தளம் மற்றும் இரு அடுக்குகள் கொண்ட, 14 வகுப்பறைகள் மற்றும் ஆண், பெண் என தனித்தனியாக 8 கழிப்பறைகள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இந்த புதிய கட்டடத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் மாணவர்கள் பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது.
இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிய பள்ளி கட்டடத்திற்கு மின்இணைப்பு வழங்குமாறு திருத்தணி மின்வாரிய அலுவலகத்தில், விண்ணப்பம் வழங்கி, அதற்கான முன்வைப்பு தொகை, 16,800 ரூபாய் செலுத்தியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மின்வாரியம் அலட்சியத்தால் தான் வகுப்பறை கட்டடங்கள் திறப்பதில் தாமதம் ஏற்படுகிறது' என்றார்.
இது குறித்து திருத்தணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
ஒரு கட்டடத்திற்கு ஒரு மின்இணைப்பு தான் வழங்க வேண்டும். அந்த வகையில் மத்துார் புதிய கூடுதல் வகுப்பறை கட்டடம் அருகே உள்ள பழைய ஆய்வக கட்டடத்திற்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் புதியதாக மின்இணைப்பு வழங்க முடியாது. அதே நேரத்தில், கூடுதல் மின்வினியோகம் செய்வதற்கு விண்ணப்பம் வழங்கி, அதற்கான முன்பணம் செலுத்தினால் அதே மின்இணைப்பில், கூடுதலாக மின்வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எனவே மாவட்ட நிர்வாகம் தான் மத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் திறந்து பயன்பாட்டிற்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
★★