ADDED : ஏப் 22, 2024 06:50 AM

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள 108 திவ்விய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த 15 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து காலை மாலை நேரங்களில் வாகனங்களில் வைத்திய வீரராகவ பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் 3 ம் நாள் கருட சேவை நடந்தது. தேரோட்ட திருவிழா நேற்று சிறப்பாக நடந்தது.
காலை 7:00 மணிக்கு திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் எழுந்தருளினார்.
சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தேரடியில் இருந்து காலை 7:30 மணிக்கு புறப்பட்டுநான்கு மாட வீதிகள் வழியாக வந்த தேர் 9:05 மணிக்கு தேரடியை வந்தடைந்தது. இதில் திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட போலீசார் மேற்கொண்டனர்.
l ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில்.
யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது. பக்தோசித பெருமாள் கோவிலின் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் பெருமாள் வீதியுலா எழுந்தருள்கிறார்.
நேற்று அதிகாலை 3:30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். தேரில் மாடவீதியில் வலம் வந்த சுவாமி, மாலை 6:00 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிலைக்கு வந்த சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

