/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம்
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம்
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம்
ADDED : ஏப் 10, 2024 11:24 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் பதிக்கும் பணி நடந்தது.
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், காங்., பா.ஜ., தே.மு.தி.க., உள்ளிட்ட 14 பேர் போட்டியிடுகின்றனர்.
இதற்காக, ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த இயந்திரங்களில், போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் பதிவு செய்யும் பணி நேற்று நடந்தது.
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலக முதல் தளத்தில், அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், 'ஸ்ட்ராங் ரூம்' சீல் பிரித்து திறக்கப்பட்டது.
மண்டல அலுவலர்களிடம், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர் பட்டியல்கள் வழங்கப்பட்டன. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷின் அறிவுறுத்தலின்படி ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னம் பொருத்தப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது.
பின்னர் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், 17 ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், தலா, 1000 ஓட்டுகள் பதிவு செய்து ஓட்டுப்பதிவு மற்றும் அதன் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டது.
இறுதியாக, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், ஸ்ட்ராங் ரூமில் வைத்து, அந்த அறைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார்.
பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகம், பொன்னேரி மீன்வளக் கல்லுாரி, பட்டாபிராம் இந்து கல்லுாரி, பூந்தமல்லி, மாதவரம் தாலுகா அலுவலகம், திருவள்ளூர் செயின்ட் ஆனிஸ் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணி முடிந்ததும், மின்னணு ஓட்டுப்பதிவு உதவி இயந்திரங்கள் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டு அறை 'சீல்' வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தபால் ஓட்டு கலெக்டர் ஆய்வு
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு பெறுவதை, கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், வரும் 19ல் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக தொகுதியில் உள்ள முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவங்கள் நேற்று முதல் பெறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் தபால் ஓட்டு படிவம் பெறுவதை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின் அவர் கூறியதாவது:
தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நபர்களிடம் தபால் ஓட்டு பெறும் பணி நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி , ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர், மாதவரம் ஆகிய பகுதிகளில், முதற்கட்டமாக தபால் ஓட்டு பெறப்பட்டு வருகிறது. விடுபட்டோருக்கு, 15ல் பெறப்படும்.
நேற்று, 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் 677, மாற்றுத்திறனாளிகள் 336 என, மொத்தம் 1,013 பேரிடம் தபால் ஓட்டு படிவங்கள் பெறப்பட்டுள்ளது'.
இவ்வாறு அவர் கூறினார்.

