/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'சீல்' வைத்த எட்டியம்மன் கோவிலில் கலெக்டர் தலைமையில் இன்று தரிசனம்
/
'சீல்' வைத்த எட்டியம்மன் கோவிலில் கலெக்டர் தலைமையில் இன்று தரிசனம்
'சீல்' வைத்த எட்டியம்மன் கோவிலில் கலெக்டர் தலைமையில் இன்று தரிசனம்
'சீல்' வைத்த எட்டியம்மன் கோவிலில் கலெக்டர் தலைமையில் இன்று தரிசனம்
ADDED : செப் 15, 2024 11:32 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோவில் உள்ளது. கோவில் விவகாரத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த இரு பிரிவினர் இடையே நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது.
ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த கோவிலில், கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் சார்பில் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்பேரில், இரு பிரிவினரை அழைத்து அரசு தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. ஒரு பிரிவினர் காலையிலும், மறு பிரிவினர் பிற்பகலிலும் கும்பாபிஷேக நாளன்று வழிபாடு செய்வது என ஒப்புக்கொண்ட பின்பே கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதி வழங்கியது.
திட்டமிட்டபடி, 22 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆகஸ்ட் மாதம், 9ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததும், காலையில் வழிபாடு செய்த பிரிவினர், பிற்பகலில் வழிபாடு செய்ய வந்த மற்றொரு பிரிவினரை வழிபாடு செய்யவிடாமல் வழியை மறித்து தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் இரு பிரிவினருக்கு இடையே மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் தலைமையில், நுாற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க, பொன்னேரி சப்- -கலெக்டர் வாஹே சங்கேத் பல்வந்த் தலைமையிலான வருவாய் துறையினர், கும்பாபிஷேகம் நடந்த அன்று கோவிலுக்கு 'சீல்' வைத்தனர்.
வழிபாடு செய்ய மறுக்கப்பட்ட பிரிவினர், கோவிலில் வழிபாடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில், மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் முன்னிலையில், இன்று வழிபாடு மறுக்கப்பட்ட பிரிவினர் சாமி தரிசனம் செய்ய இருக்கின்றனர்.
'சீல்' பிரிக்கப்பட்டு, சாமி தரிசனம் செய்ய இருப்பதால், வழுதலம்பேடு கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

