/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெள்ள பாதிப்பை தவிர்க்க ரூ.30 கோடியில் வடிகால்
/
வெள்ள பாதிப்பை தவிர்க்க ரூ.30 கோடியில் வடிகால்
ADDED : மே 02, 2024 01:51 AM

அம்பத்துார்:மழை வெள்ள பாதிப்பை தவிர்க்கும் வகையில் கொரட்டூரில், 30 கோடி ரூபாய் மதிப்பில், புதிய வடிகால் அமைக்கும் பணி நடக்கிறது.
சென்னை, அம்பத்துார் மண்டலத்தில் உள்ள கொரட்டூர் வடக்கு பகுதி, ஒவ்வொரு ஆண்டும், பருவமழையின் போது வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்படுவது தொடர்ந்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், கொரட்டூர் வெள்ள பாதிப்பை பார்வையிட, தமிழக முதல்வர் சென்ற போது, மேற்கண்ட பிரச்னை குறித்து தெரிவிக்கப்பட்டது.
அதன் எதிரொலியாக, அம்பத்துார் ஏரி கலங்கலில் இருந்து, பட்டரவாக்கம் ரயில் பாதையையொட்டி, 1,500 மீட்டர் நீளம், கொரட்டூர் வடக்கில், 1,100 மீட்டர் நீளம் என, கொரட்டூர் ஏரி வரை உள்ள, பழைய உபரிநீர் வடிகாலை மேம்படுத்த திட்டமிடப்பட்டது.
அந்த புதிய வடிகால், கொசஸ்தலையாறு வடிநிலக் கோட்டம், ஆசிய வங்கியின் உதவியுடன், 30 கோடி ரூபாய் மதிப்பில் துார் வாரி, 7 அடி முதல் 9 அடி அகலம், 10 அடி ஆழம் கொண்ட, கான்கிரீட்' தடுப்புச்சுவருடன் அமைக்கப்படுகிறது.
சுற்றுவட்டாரங்களில் உள்ள வீடு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை, அதில் விட முடியாது. அம்பத்துார் ஏரி உபரிநீர் மற்றும் மழைநீர் மட்டுமே, கொரட்டூர் ஏரிக்குள் பாயும்.
மார்ச் மாதம் துவங்கிய வடிகால் பணியை, ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி இதற்காக, ரயில்வே துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையிடம் முறையாக அனுமதி பெற்று, வடிகால் திட்ட பணியை நடத்தி வருகிறது.
அதில், வடிகால் அமைக்கப்படும் சில இடங்களில், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்னையும் உள்ளது. அதை, வருவாய்த்துறையின் மூலம் தீர்க்கவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த வடிகால் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வந்தால், கருக்கு, டி.டி.பி., காலனி, கொரட்டூர் வடக்கு பகுதி ஆகியவை, மழை வெள்ள பாதிப்பில் சிக்காது.
கொரட்டூர் ஏரியில் கழிவுநீர் பாய்வதும் தடுக்கப்படும் என, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

