/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயிர் காப்பீடு நிவாரணம் வழங்காததால் அண்ணாமலைச்சேரி விவசாயிகள் அதிருப்தி
/
பயிர் காப்பீடு நிவாரணம் வழங்காததால் அண்ணாமலைச்சேரி விவசாயிகள் அதிருப்தி
பயிர் காப்பீடு நிவாரணம் வழங்காததால் அண்ணாமலைச்சேரி விவசாயிகள் அதிருப்தி
பயிர் காப்பீடு நிவாரணம் வழங்காததால் அண்ணாமலைச்சேரி விவசாயிகள் அதிருப்தி
ADDED : செப் 17, 2024 09:29 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த அண்ணாமலைச்சேரி கிராமத்தில், 300 ஏக்கர் பரப்பளவில், ஆண்டுக்கு ஒரு முறை சம்பா பருவத்தின்போது நெல் பயிரிடப்படுகிறது.
இந்த கிராமத்தில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால், மழைநீரை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர். கடந்தாண்டு, சம்பா பருவத்தின்போது, 300 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்தது.
நன்கு வளர்ந்து வந்த நிலையில், டிசம்பர் மாதம் வீசிய புயல் மற்றும் கனமழையால், விவசாய நிலங்கள் பாதிப்பிற்கு உள்ளாகின. இதனால், வருவாய் இழப்பிற்கு ஆளாகினர்.
அதேபோல, பொன்னேரியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும், நெற்பயிர்கள் பாதித்தன. விவசாயிகள் பயிர் காப்பீடு பெற்றிருந்ததால், நிவாரணம் கிடைக்கும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடந்தாண்டு சம்பா பருவத்தின்போது பாதிப்பிற்கு உள்ளான நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு வாயிலாக இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
அதேசமயம், அண்ணாமலைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த எந்தவொரு விவசாயிக்கும் பயிர் காப்பீடு நிவாரண தொகை கிடைக்கவில்லை. இங்குள்ள விவசாயிகளும், நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்திருந்தனர்.
மற்ற கிராமங்களில் பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், அண்ணாமலைச்சேரி விவசாயிகளுக்கு கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், கடைகோடியாக உள்ள எங்கள் கிராமத்தின் விளைநிலங்கள் வழியாக சென்று, பழவேற்காடு ஏரியை சென்றடைகிறது.
இதனால், அதிக நாட்கள் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி, பாதிப்பிற்கு உள்ளாகின. ஆனால், எங்கள் கிராமத்திற்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. வேளாண் துறையினரை கேட்டால், சரியான பதில் அளிக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.