/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கலெக்டர் அலுவலகத்தில் தேன் கூடு: மக்கள் அச்சம்
/
கலெக்டர் அலுவலகத்தில் தேன் கூடு: மக்கள் அச்சம்
ADDED : செப் 15, 2024 01:13 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கார் நிறுத்தும் இடமான 'போர்டிகோ'வில் தேன் கூடு இருப்பதால், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
திருவள்ளூர்-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, மாவட்ட வருவாய் அலுவலர், சமூக நலத்துறை உள்ளிட்ட அனைத்து மாவட்ட அளவிலான தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் மற்றும் பல்வேறு பணி நிமித்தமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பொதுமக்கள் மனு அளிக்க வந்து செல்கின்றனர்.
கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாயிலில், கலெக்டர் கார் நிறுத்தும் இடம் அமைந்துள்ளது. இந்த 'போர்டிகோ' கூரையில், பெரிய அளவில் தேன் கூடு உள்ளது. சில நேரங்களில், கூட்டில் இருந்து தேனீக்கள் அவ்வப்போது பறந்து வருவதால், அலுவலகத்திற்கு வரும் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சப்படுகின்றனர்.
எனவே, அரசு ஊழியர் மற்றும் மக்களை அச்சுறுத்தும் தேன்கூட்டினை அப்புறப்படுத்த, பொதுப்பணித் துறை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.