பராமரிப்பு இல்லாத பாலம் வாகன ஓட்டிகள் ‘திக்... திக்’
பராமரிப்பு இல்லாத பாலம் வாகன ஓட்டிகள் ‘திக்... திக்’
ADDED : ஆக 09, 2026 04:21 PM
பொன்னேரி: உப்பளம் – மடிமைகண்டிகை சாலையில் உள்ள பாலம் பராமரிப்பின்றி உள்ளது. இதனால், சாலையில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
பொன்னேரி அடுத்த உப்பளம் – மடிமைகண்டிகை சாலையில், கால்வாய் குறுக்கே உள்ள பாலம் பராமரிப்பின்றி உள்ளது. பாலத்தின் மீது கான்கிரீட் கட்டுமானங்கள் சிதைந்து, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து வருகின்றன.
இதனால், பாலத்தின் உறுதிதன்மை கேள்விக்குறியாகி வருகிறது. பாலத்தின் இருபுறமும் பக்கவாட்டு தடுப்புச்சுவர்களும் சேதமடைந்து, வாகனங்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது. பாலத்தில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிக் கற்களின் மீது வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
மடிமைகண்டிகை, வீரங்கிமேடு, ஆசானபூதுார், அரவாக்கம், மத்ராவேடு, ஏருசிவன் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களின் பிரதான போக்குவரத்து பாலமாக இது உள்ளது.
எனவே, பாலத்தை முறையாக பராமரித்து, பக்கவாட்டு தடுப்புச்சுவர்களை புதிதாக அமைக்க, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
