/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது தள்ளுமுள்ளு குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட மக்கள்
/
ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது தள்ளுமுள்ளு குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட மக்கள்
ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது தள்ளுமுள்ளு குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட மக்கள்
ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது தள்ளுமுள்ளு குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட மக்கள்
ADDED : பிப் 15, 2025 01:48 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது மேல்பாக்கம் கிராமம். அந்த கிராமம், 1950களில், ஆந்திராவுக்கு உட்பட்ட ஸ்ரீகாளஹஸ்தி சமஸ்தானத்தின் கீழ் இருந்த பகுதியாகும். அந்த கிராமத்தில் சர்வே எண்:101/3ல் உள்ள 70 ஏக்கர் நிலம், அப்போதைய நில பதிவேடுகளில், கல்மேடு என, தெலுங்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழகத்துடன் அப்பகுதி இணைந்த பின், மேற்கண்ட மக்கள் வசிக்கும் பகுதி, கால போக்கில் நில அளவை பதிவேட்டில் காப்பு காடாக மாற்றலானது. நான்கு தலைமுறையாக அப்பகுதி மக்கள் வசித்து வரும் நிலையில், அனைவரும், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என, அனைத்து அரசு சான்றுகளை வைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில், அங்கன்வாடி மையம், குடிநீர், சாலை, மின் இணைப்பு என அனைத்து அடிப்படை வசதிகளும் அரசு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வலியுறுத்தி, 2023ம் ஆண்டு தனியார் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். காப்பு காடாக இருந்தால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி அந்த ஆண்டே உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உத்தரவு மீதான நோட்டீஸ்கள், அனைத்து வீடுகளிலும் வனத்துறையினர் ஒட்டினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தகுந்த ஆதாரங்களுடன், கிராம மக்கள் சார்பில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நில நிர்வாக ஆணையரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அதன் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும் போது, ஏற்கனவே வழக்கு தொடர்ந்த தனியார், மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதன்படி, உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, மேல்பாக்கம் கிராமத்தில் நேற்று காலை, 300 போலீசார் குவிக்கப்பட்டு, கும்மிடிப்பூண்டி தாசில்தார் சரணவகுமாரி தலைமையில், வனத்துறை முன்னிலையில், 10 ஜே.சி.பி.,க்களுடன், 55 வீடுகளை அகற்ற அரசு துறையினர் சென்றனர்.
அந்த வீடுகளுக்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி துண்டிக்கப்பட்டது. அப்போது, கிராம மக்களும், அவர்கள் ஆதரவாளர்களும் இணைந்து, வீடுகளை காலி செய்ய ஒரு மாத கால அவகாசம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்க மறுத்த அரசு துறை அலுவலர்களுக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், 26 பேரை குண்டுகட்டாக இழுத்து சென்று, அரசு பேருந்தில் ஏற்றி, மாதர்பாக்கத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் அடைத்தனர்.
பின், வீடுகளை இடிக்க ஜே.சி.பி.,க்கள் அணிவகுத்து சென்றன. ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் முன் பகுதியை இடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு, அரசு துறை அலுவலர்களிடம் காண்பிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அரசு துறை அலுவலர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர். பின், கைது செய்து பேருந்தில் ஏற்றி செல்லப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

