/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 12, 2024 02:39 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த இருளிப்பட்டு பகுதியில், மீன் வலைகளுக்காக இழை தயாரிக்கும் 'சூப்பர் பில்' என்ற தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 100க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
மூன்று மாதங்களுக்கு முன், தொழிலாளர்கள் புதிதாக தொழிற்சங்கம் துவங்கினர். இதனால், தொழிற்சாலை நிர்வாகம், சங்கத்தின் நிர்வாகிகள் சிலரை பணியிடை நீக்கம் செய்தது.
இதைக் கண்டித்து, ஜூலை 8ம் தேதி முதல் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, 48 நாட்கள் போராட்டம் நீடித்ததை தொடர்ந்து, கடந்த மாதம், 23ம் தேதி பொன்னேரி எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர் மற்றும் காவல்துறை, தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேச்சு நடத்தி சமுக தீர்வு காணப்பட்டது.
இந்நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகம் கடுமையான நிபந்தனைகளை விதிப்பதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, நேற்று தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பொன்னேரி சப் - கலெக்டர் அலுவலகம் அருகே, கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
பின், இது தொடர்பாக பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்திடம் முறையிட்டனர். தொழிற்சாலை நிர்வாகத்தை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.