/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் 'சீசன் பாஸ்' ரத்து செய்ய பரிந்துரை
/
வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் 'சீசன் பாஸ்' ரத்து செய்ய பரிந்துரை
வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் 'சீசன் பாஸ்' ரத்து செய்ய பரிந்துரை
வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் 'சீசன் பாஸ்' ரத்து செய்ய பரிந்துரை
ADDED : மார் 14, 2025 02:25 AM
சென்னை:அடிக்கடி மோதலில் ஈடுபடும் மாணவர்கள் பயணிக்கும், 13 மின்சார ரயில்களில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. வன்முறையில் ஈடுபடும் மாணவர்களின், 'சீசன் பாஸ்' ரத்து செய்யவும், தெற்கு ரயில்வேக்கு போலீசார் பரிந்துரைத்துள்ளனர்.
சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடங்களில் தினமும், 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக தினமும், ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில், கல்லுாரி மாணவர்கள் செல்லும்போது, அவர்களுக்குள் மோதல் நடப்பது அதிகரித்து வருகிறது. எனவே, பயணியர் பாதுகாப்பு கருதி, மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ரயில்வே போலீஸ் சிறப்பு குழுக்களை அமைத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
பச்சையப்பன் கல்லுாரி, நந்தனம் கல்லுாரி, மாநில கல்லுாரி மாணவர்களில் ஒரு சிலர், குழுவாக மின்சார ரயில்களில் பயணிக்கும்போது, விதி மீறல்களில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கி கொள்கின்றனர்.
இதை தவிர்க்கும்படி பல முறை எச்சரித்து அனுப்பி உள்ளோம். ஆனால், சில மாணவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அத்தகைய மாணவர்களின் மீது வழக்கு பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதற்கிடையே, சென்னையில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை, தாம்பரம் ஆகிய தடங்களில், கல்லுாரி மாணவர்கள் அதிகம் பயணிக்கும், 13 மின்சார ரயில்களின் நேரத்தை தேர்வு செய்துள்ளோம். இந்த ரயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில், ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினரை கூடுதலாக நியமித்து, ரோந்து பணியை அதிகரித்துள்ளோம்.
சென்னை கடற்கரை, சென்ட்ரல், பேசின்பிரிட்ஜ், கொருக்குப்பேட்டை, பெரம்பூர், கிண்டி, சைதாப்பேட்டை, திருமுல்லைவாயல், அன்னணுார் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கல்லுாரிகள் வாயிலாக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மோதலில் ஈடுபடும் மாணவர்களுக்கு,'சீசன் பாஸ்' வழங்குவதை ரத்து செய்யவும், தெற்கு ரயில்வேக்கு பரிந்துரை செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.