/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பனப்பாக்கம் ஏரியில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
/
பனப்பாக்கம் ஏரியில் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
ADDED : ஆக 12, 2024 06:54 AM

பொன்னேரி,: பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பில், பாசன ஏரி அமைந்து உள்ளது. ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீரை கொண்டு, 300ஏக்கர் பரப்பு விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
இந்நிலையில், ஏரியில் நுாற்றுக்கணக்கான கருவேல மரங்கள் வளர்ந்து காடாக மாறி இருக்கிறது. இவை ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை வேகமாக உறிஞ்சி நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஏரியில் சூழ்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற, நீர்வள ஆதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
ஏரிக்கு உள்வாய் பகுதி எதுவும் இல்லை. சுற்றிலும் கரைகளை கொண்டதாக இருப்பதால், வரத்துக்கால்வாய் வழியாக மட்டும் குறைந்த அளவே தண்ணீர் வந்தடைகிறது.
அந்த தண்ணீரும் கருவேல மரங்களால் விரைவில் உறிஞ்சப்படுகிறது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
கருவேல மரங்களை அகற்றினால், கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க வாய்ப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.