/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'சோலார் பேனல்' வசதியுடன் கூரை ரயில் பயணியர் சங்கம் வலியுறுத்தல்
/
'சோலார் பேனல்' வசதியுடன் கூரை ரயில் பயணியர் சங்கம் வலியுறுத்தல்
'சோலார் பேனல்' வசதியுடன் கூரை ரயில் பயணியர் சங்கம் வலியுறுத்தல்
'சோலார் பேனல்' வசதியுடன் கூரை ரயில் பயணியர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஆக 01, 2024 12:48 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஆறு நடைமேடைகள் உள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வழியாக, தினமும் 350 புறநகர் மின்சார ரயில், ஒன்பது விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன.
இங்கிருந்து தினமும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பயணியர் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ஆண்டுக்கு, 6 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.
ரயில்கள் நின்று செல்வதற்காக திருவள்ளூரில் ஆறு நடைமேடைகள் உள்ளன. இதில், ஐந்து நடைமேடைகள் விரைவு ரயில்கள் நின்று செல்லும் வகையில், நீளமாக அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், நடைமேடைகளில் அமைக்கப்பட்டு உள்ள கூரைகள், மின்சார ரயில்கள் நிற்கும் அளவில் தான் உள்ளன.
இதனால், விரைவு ரயில்களில் பயணம் செய்வோர், வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சோலார் பேனல்
திருவள்ளூர் மாவட்ட ரயில்வே பயணியர் சங்கத்தினர், கூரை அமைக்கும் செலவை, முதலீடாக பயன்படுத்தும் வகையில் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
அதில், கூரையை 'சோலார் பேனலாக' அமைத்தால், அதன் வாயிலாக சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க முடியும். இதனால், ரயில் நிலையத்தில் பயன்படும் மின்சார செலவு குறைவதுடன், ரயில் நிலைய நடைமேடையில் பயணியர் அமர நிழல் வசதியும் கிடைக்கும்.
அதன்படி, ஆறு நடைமேடைகளில் சோலார் பேனல் அமைத்தால், மின்சார செலவு குறையும். குறைந்தபட்சம் ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை செலவு குறையும்.
இதுகுறித்து, திருவள்ளூர் ரயில் பயணியர் சங்க நிர்வாகி கே.பாஸ்கர் கூறியதாவது:
ஐந்து நடைமேடைகளிலும், சோலார் பேனல் அமைத்து, மின்சாரம் தயாரித்தால், கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், பிற மின்தேவைகளுக்கும் உபயோகமாக இருக்கும்.
நடைமேடையில் கூரை அமைத்தால் பயணியருக்கும், மழை, வெயில் காலங்களில் நிழல் கிடைக்கும்.
தற்போது, 29 கோடி ரூபாய் மதிப்பில், ரயில் நிலையம் புனரமைப்பு பணி நடக்கிறது. இத்துடன் சில கோடி செலவில், 'சோலார் பேனல்' அமைத்தால் ரயில்வே துறைக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில், 'சோலார் பேனல்' அமைத்து, சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பது குறித்து, ரயில் பயணியர் சங்கத்தினர், ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆலோசனை கடிதம் வழங்கினர். இதைபரிசீலனை செய்ய வேண்டி, புதுடில்லியில் உள்ள ரயில்வே துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, அப்போது சென்னை கோட்ட ரயில்வே துறை தெரிவித்தது. இருப்பினும், இதுகுறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாமல், ரயில்வே துறை கிடப்பில் போட்டுள்ளது.
- ஒய்.ஜெயபால்ராஜ்,
செயலர், நகர நுகர்வோர் பாதுகாப்பு சங்கம்,
திருவள்ளூர்.