/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி படுமோசம் பட்டமந்திரி, பாப்பரம்பாக்கம், தொழுதாவூர் மக்கள் அச்சம்
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி படுமோசம் பட்டமந்திரி, பாப்பரம்பாக்கம், தொழுதாவூர் மக்கள் அச்சம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி படுமோசம் பட்டமந்திரி, பாப்பரம்பாக்கம், தொழுதாவூர் மக்கள் அச்சம்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி படுமோசம் பட்டமந்திரி, பாப்பரம்பாக்கம், தொழுதாவூர் மக்கள் அச்சம்
ADDED : மார் 02, 2025 11:49 PM

மீஞ்சூர் அடுத்த பட்டமந்திரி கிராமத்தில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பழுதடைந்த நிலையில் உள்ளது. கான்கிரீட் துாண்கள் சேதமடைந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன.
அவ்வப்போது, கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து விழுகின்றன. பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. தொட்டி அமைந்துள்ள வளாகத்தில், அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவை அமைந்துள்ளன.
இந்த தொட்டியால் மாணவர்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், அங்குள்ள விளையாட்டு திடலில், பட்டமந்திரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விடுமுறை நாட்களில் கால்பந்து, கிரிக்கெட் ஆகியவை விளையாடுகின்றனர்.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பரம்பாக்கம்
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட பாப்பரம்பாக்கம் ஊராட்சியில், அங்கன்வாடி மையம் அருகே, 25 ஆண்டுகளுக்கு முன், 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
இந்த குடிநீர் தொட்டி, 10 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இல்லாததால், மேற்புறம் மற்றும் துாண்கள் ஆங்காங்கே சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. மேலும், தொட்டியின் மேற்புரம் செடிகள் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக ஏற்பட்ட விரிசலால் குடிநீர் கசிந்து வருகிறது.
இந்த குடிநீர் தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படாமல் குடிநீர் வழங்கப்படுவதால், தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதனால், அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்புவதில் பெற்றோர் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த 2008ம் ஆண்டு, ஐ.எஸ்.ஓ., 9001 தரச்சான்று பெற்ற இந்த ஊராட்சி, அதன்பின் 2011 - 12ம் ஆண்டு தமிழக அரசால் துாய்மையான ஊராட்சிக்கான விருது மற்றும் 2012 - 13ம் ஆண்டு சிறந்த ஊராட்சிக்கான பிரதமரின் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டுமென, பாப்பரம்பாக்கம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாலங்காடு
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது தொழுதாவூர் கிராமம். இங்கு, 300க்கும் மேற்பட்ட வீடுகளில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, 2002 -- 03ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
ஆழ்குழாய் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீர் ஏற்றப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி, தற்போது சேதமடைந்து காணப்படுகிறது.
கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதன் காரணமாக, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து வருகிறது. மேலும், குழாய் மற்றும் வால்வு சேதமடைந்து, தண்ணீர் வீணாகிறது.
எனவே, சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நமது நிருபர் குழு -