/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு
/
திருவள்ளூரில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு
ADDED : ஏப் 14, 2024 11:10 PM
சென்னை: சென்னையை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆவின் வாயிலாக, நாள்தோறும் 14.5 லட்சம் லிட்டர் பால் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. வெளிமாவட்டங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் வரும் பால், அம்பத்துார், சோழிங்கநல்லுார், மாதவரம் பால் பண்ணைகளில் பாக்கெட் செய்யப்படுகிறது.
கடும் கோடை வெயில் காரணமாக பல மாவட்டங்களில், பால் உற்பத்தி குறைந்துள்ளது. லோக்சபா தேர்தல் காரணமாக உள்ளூரில், பால் தேவை அதிகரித்து உள்ளது. இதனால், ஆவினுக்கு பால் வரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பல மாவட்டங்களில் சிறுக, சிறுக சேகரித்து பாலை சென்னைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால், சென்னையில் உள்ள பால் பண்ணைகளில், பால் பாக்கெட் உற்பத்தி தாமதம் ஆகிறது. மாதவரத்தில், நேற்று காலை 8:00 மணிக்கு புறப்பட வேண்டிய பால் வாகனங்கள், 10.30 மணிக்கு தான் புறப்பட்டு சென்றது.
அம்பத்துார், சோழிங்கநல்லுார் பண்ணைகளிலும், இதேபோல காலதாமதம் ஏற்பட்டது. இதனால், ஆவின் பால் கிடைக்காமல், சென்னையில் பலரும் திண்டாடி வருகின்றனர். ஆனால் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக, பால்வளத்துறை செயலர், ஆவின் நிர்வாக இயக்குனருக்கு, அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திலும், நேற்று முதல் ஆவின் பால் தட்டுப்பாடு துவங்கியுள்ளது.
இங்கு நாள்தோறும், 80,000 லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. இவை, காக்களூர் பால் பண்ணையில் பாக்கெட் செய்யப்படுகிறது.
ஆந்திர மாநில எல்லைகளில் இருந்து காக்களூர் பால் பண்ணைக்கு வரத்து குறைந்து உள்ளது. காக்களூர் வரவேண்டிய, ஆவின் பால், சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுவே தட்டுப்பாடிற்கு காரணம் என தெரியவந்து உள்ளது.
நேற்று ஆவின் பால் கிடைக்காமல், செங்குன்றம், சோழவரம், அலமாதி, கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அல்லாடினர்.

