/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு - காட்டுப்பள்ளி இடையே கடற்கரை சாலையில் பாலம் இல்லாததால் தவிப்பு
/
பழவேற்காடு - காட்டுப்பள்ளி இடையே கடற்கரை சாலையில் பாலம் இல்லாததால் தவிப்பு
பழவேற்காடு - காட்டுப்பள்ளி இடையே கடற்கரை சாலையில் பாலம் இல்லாததால் தவிப்பு
பழவேற்காடு - காட்டுப்பள்ளி இடையே கடற்கரை சாலையில் பாலம் இல்லாததால் தவிப்பு
ADDED : மே 12, 2024 09:10 PM

பழவேற்காடு: பழவேற்காடு - காட்டுப்பள்ளி இடையே உள்ள கடற்கரை சாலையில், கடல் சீற்றத்தால் அலைகளுடன் வெளியேறிய மணல் சாலையில் குவிந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தியதால், மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள், தொழில் நிறுவனங்களுக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு - காட்டுப்பள்ளி இடையே உள்ள, 13 கி.மீ., தொலைவிற்கான கிழக்கு கடற்கரை சாலையில் கோரைகுப்பம், காளஞ்சி, கருங்காலி உள்ளிட்ட, 15 மீனவ கிராமங்கள் உள்ளன.
இவற்றில், பழைய சாட்டன்குப்பம், கோரைகுப்பம், காளஞ்சி, கருங்காலி ஆகிய கிராமங்கள் கடற்கரைக்கு மிக அருகாமையில் அமைந்து உள்ளன.
புயல், மழைக்காலங்களில் கடல்சீற்றம் அதிகரிக்கும்போது, ராட்சத அலைகளால், கடற்கரை மணல் இந்த சாலையில் வந்து குவிகிறது.
குறிப்பாக, காளஞ்சி - கருங்காலி இடையே உள்ள வளைவுப்பபகுதி சாலையில் அதிகளவில் கடற்கரை மணல் குவிகிறது. கடற்கரை மணல் சாலையில் குவிவதை தடுக்க, இருபுறமும், கான்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைத்தும் பயனில்லை.
அவற்றை கடந்து, மணல் குவிந்துவிடுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் குவிந்திருக்கும் மணலில் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர். கார், வேன் உள்ளிட்டவை அந்த சாலையில் பயணிப்பதை முற்றிலும் தவிர்த்து, வஞ்சிவாக்கம், மீஞ்சூர் வழியாக சென்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், காளஞ்சி பகுதியில் கடல்நீர் சாலை வரை வழிந்தோடியது. கடல்நீருடன் மணல் சாலையில் குவிந்தது.
அத்திப்பட்டு புதுநகர், வல்லுார் பகுதியில் உள்ள அனல் மின்நிலையங்கள், காட்டுபள்ளியில் உள்ள துறைமுகங்கள், கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த சாலை வழியாக பயணிக்கும் நிலையில், காளஞ்சியில் மணல் குவிந்ததால் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
வேறு வழியின்றி, பழவேற்காடு, வஞ்சிவாக்கம், மீஞ்சூர் வழியாக, 30 -40 கி.மீ., சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நேர விரயம், கூடுதல் எரிபொருள் செலவினங்கள் ஏற்பட்டது.
பழவேற்காடு -காட்டுப்பள்ளி இடையேயான சாலை முழுதும் குண்டும் குழியுமாகவும், சரளைகற்கள் பெயர்ந்தும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. தற்போது மணலும் குவிந்து கிடப்பதால் மீனவ கிராமங்களை சேர்ந்த கிராமவாசிகள், வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்க பொதுசெயலர் துரை மகேந்திரன் கூறியதாவது:
பழவேற்காடு - காட்டுப்பள்ளி இடையேயான சாலை, ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து, மாநில நெடுஞ்சாலைத்துறையின் இதர மாவட்ட சாலைகள் பிரிவில் ஒப்படைக்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத்துறை அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், நிதி ஒதுக்கீடும் வரவில்லை என கூறி வருகிறது.
இதனால் இந்த சாலையை மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை என இருதுறைகளும் கண்டுகொள்வதில்லை. இந்த சாலை வழியாக தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், காட்டுப்பள்ளி, அத்திப்பட்டு, வல்லுார் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள இந்த சாலையில் தினமும் தடுமாற்றத்துடனும், மரண பயத்துடனும் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் உள்ள, 13 மீனவ கிராமத்தினர் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளுக்கு பழவேற்காடு பகுதிக்கு செல்வதற்கு பெரும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். ஆட்டோ, ஆம்புலன்ஸ் உள்ளிட்டவையும் வர தயங்குகின்றன.
சாலையில் குவிந்துள்ள மணலை அவ்வப்போது அகற்றுவது தீர்வாகாது. நிரந்தர தீர்வு காணும் வகையில் கடற்கரை மணல் குவியும் இடங்களில், உயர்மட்ட பாலம் அமைக்கவும், தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., நிதியில் தரமான சாலை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.