/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின் பிரச்னைக்கு தீர்வு எப்போது? தி.மு.க., கவுன்சிலர்கள் ஆவேசம்!
/
மின் பிரச்னைக்கு தீர்வு எப்போது? தி.மு.க., கவுன்சிலர்கள் ஆவேசம்!
மின் பிரச்னைக்கு தீர்வு எப்போது? தி.மு.க., கவுன்சிலர்கள் ஆவேசம்!
மின் பிரச்னைக்கு தீர்வு எப்போது? தி.மு.க., கவுன்சிலர்கள் ஆவேசம்!
ADDED : ஜூலை 25, 2024 11:44 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம், தலைவர் ஷகிலா தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் பாஸ்கரன், துணை தலைவர் கேசவன் முன்னிலை வகித்தனர்.
இதில் பிறப்பு, இறப்பு, வரி வசூல், வரவு - செலவு, திட்ட அனுமதி உட்பட, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள் வாசித்த பின், தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது:
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த ஒன்றரை மாதங்களாக மின்வெட்டு பிரச்னை அதிகரித்து வருகிறது. கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் புகார் தெரிவித்தாலும், முறையாக பதில் அளிப்பதில்லை.
மின் கட்டண உயர்வால், தமிழக அரசு மீது, ஏற்கனவே மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டியில் ஏற்பட்டு வரும் மின்வெட்டு பிரச்னை மேலும் கொதிப்படைய செய்துள்ளது. எனவே, உடனடியாக மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து கவுன்சிலர்கள் சிலர் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அப்துலர் கறீம் - தி.மு.க.,: தாமரை ஏரியை மூழ்கடித்து படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும். ஏரியின் கரையை பலப்படுத்த வேண்டும்.
ஏரியின் உபரிநீர் தடையின்றி வடிந்து செல்ல கால்வாய் வசதியை மேம்படுத்த வேண்டும். எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள நாள் அங்காடி கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் அமைக்க வேண்டும்.
ராஜேஸ்வரி - வி.சி.க.,: கும்மிடிப்பூண்டி, 15வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மின் கம்பங்களுக்கான இடைவெளி அதிகமாக இருப்பதால், மின் கம்பிகள் தொங்கியபடி உள்ளன. காற்று அடிக்கும் போது மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி, அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.
குமரபூபதி - தி.மு.க.,: வள்ளியம்மா நகர் மற்றும் பழைய தபால் தெரு கால்வாய் பழுதை சீரமைக்க வேண்டும். வள்ளியம்மா நகரில் ஆபத்தாக உள்ள மின் கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
இதை தொடர்ந்து, 'கவுன்சிலர்களின் கோரிக்கைகள் மீது உடனடி தீர்வு காணப்படும்' என, செயல் அலுவலர் பாஸ்கரன் தெரிவித்தார்.