/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
15 மணி நேர தொடர் மின் வெட்டு பில்லாக்குப்பம் மக்கள் கடும் அவதி
/
15 மணி நேர தொடர் மின் வெட்டு பில்லாக்குப்பம் மக்கள் கடும் அவதி
15 மணி நேர தொடர் மின் வெட்டு பில்லாக்குப்பம் மக்கள் கடும் அவதி
15 மணி நேர தொடர் மின் வெட்டு பில்லாக்குப்பம் மக்கள் கடும் அவதி
ADDED : ஆக 22, 2025 02:15 AM
கும்மிடிப்பூண்டி:ஏழு ஆண்டுகளாக புதிய மின் பாதை திட்ட பணிகள், கிடப்பில் இருப்பதால், பில்லாக்குப்பம் கிராம மக்கள் தொடர் மின் வெட்டு பிரச்னைக்கு ஆளாகி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை, 15 மணி நேர தொடர் மின் வெட்டு ஏற்பட்டதால் மின் வாரியம் மீது கிராம மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது பில்லாக்குப்பம் கிராமம். பூவலம்பேடு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் கீழ் உள்ள அந்த கிராமத்திற்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
சிறுபுழல்பேட்டை, குருவராஜகண்டிகை கிராமம் வழியாக பில்லாக்குப்பம் கிராமத்திற்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இடையில், அடர்ந்த தைலந்தோப்பு இருப்பதால், மழை பெய்தாலும், காற்று அடித்தாலும், மின் துண்டிப்பு ஏற்படுவது வழக்கம்.
பூவலம்பேடு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், ஊழியர்கள் பற்றாக்குறை ஒரு புறம் இருக்க, இரவு நேரத்தில் ஏற்படும் மின் வெட்டு பிரச்னையை கண்டறிந்து சரி செய்ய முடியாத நிலை தொடர்கிறது.
அதனால் இரவு நேரத்தில், பல மணி நேர தொடர் மின்வெட்டு பிரச்னைக்கு பில்லாக்குப்பம் கிராம மக்கள் ஆளாகி வருகின்றனர். ஒவ்வொரு முறை தொடர் மின் வெட்டு ஏற்படும் போது, மறுநாளின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்பதாக கிராம மக்கள் புலம்பி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த மின் வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, சிறுபுழல்பேட்டை கிராமத்தில் இருந்து நேரடியாக பில்லாக்குப்பம் கிராமத்திற்கு, 2018ம் ஆண்டு புதிய உயர் அழுத்த மின் பாதை ஏற்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டன.அந்த திட்ட பணிகள், பெரும் பகுதி முடிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏழு ஆண்டு காலமாக எஞ்சிய பணிகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
பணிகளை நிறைவு செய்ய வலியுறுத்தி பல முறை முறையிட்டும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை, 15 மணி நேர தொடர் மின் வெட்டு ஏற்பட்டதால், பில்லாக்குப்பம் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
கிராம மக்களின் நலன் கருதி, கிடப்பில் போடப்பட்ட புதிய மின் பாதை திட்டத்திற்கு தடையில்லா மின் வினியோகம் செய்ய மின் வாரியம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பில்லாக்குப்பம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.