/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோழவரம் ஏரியில் இருந்து 200 கனஅடி தண்ணீர் திறப்பு
/
சோழவரம் ஏரியில் இருந்து 200 கனஅடி தண்ணீர் திறப்பு
ADDED : நவ 11, 2025 10:28 PM

சோழவரம்: சோழவரம் ஏரியில் இருந்து, விநாடிக்கு 200 கன அடி தண்ணீர், பேபி கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு திறக்கப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் தேவையின்போது, ஷட்டர்கள் திறக்கப்பட்டு, பேபி கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்படும்.
பின், அங்கிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்கு வெளியேற்றப்படும். இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கரை சீரமைப்பு பணிகளுக்கு பின், நடப்பாண்டு சோழவரம் ஏரியில் நீர்வரத்து உள்ளது.
நேற்றைய நிலவரப்படி ஏரியில், 0.77 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. அடுத்து வரும் நாட்களில் கனமழை பெய்தால், ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில், புதிதாக சீரமைக்கப்பட்ட கரைகள் உள்வாங்கி சேதம்டைந்தன. அங்கு, தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகிறது.
இந்நிலையில், ஏரியில் தேங்கியிருக்கும் தண்ணீரை, சென்னையின் குடிநீர் தேவைக்காக, நேற்று காலை முதல், விநாடிக்கு 200 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள இரண்டு ஷட்டர்கள் திறக்கப்பட்டு, அவற்றின் வழியாக வெளியேறும் தண்ணீர், பேபி கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது.
ஏரியின் கரையோர பகுதிகளை, நீர்வளத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

