/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒரே நாளில் அடுத்தடுத்து 4 விபத்து: 6 பேர் பலி
/
ஒரே நாளில் அடுத்தடுத்து 4 விபத்து: 6 பேர் பலி
ADDED : செப் 25, 2024 07:08 AM

சென்னை : சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த விபத்துகளில், டூவீலர்கள் மீது வாகனங்கள் மோதியதில் ஆறு பேர் பலியாகினர்.
சிங்கபெருமாள்கோவில்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் அடுத்த கவசநல்லாத்துார் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 50. பூந்தமல்லி பகுதி டாஸ்மாக் கடை பணியாளர். நேற்று காலை, திருவள்ளூர் மாவட்டம், பரணிபுத்துார் பகுதியை சேர்ந்த நண்பர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ரவி, 48 என்பவருடன், செங்கல்பட்டு பதிவாளர் அலுவலகத்திற்கு, டி.வி.எஸ்., ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
ஸ்கூட்டியை ரவி ஓட்டினார். சிங்கபெருமாள்கோவிலை கடந்து, ஜி.எஸ்.டி., சாலையில் சென்ற போது, பின்னால் அதிவேகமாக வந்த இன்னோவா கார், ஸ்கூட்டி மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே செந்தில்குமார் பலியானார். படுகாயமடைந்த ரவியை அங்கிருந்தோர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, இன்னோவா கார் ஓட்டுனர், திருநீர்மலை பகுதியை சேர்ந்த பவித்ரன், 32, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
மதுராந்தகம்: சென்னை, ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் முத்து, 40. இவர் மனைவி சீதா, 35. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று இரவு, மதுராந்தகம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு, ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் இருசக்கர வாகனத்தில், தம்பதி இருவரும் வந்துள்ளனர். விழா முடிந்து, சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். மாமண்டூர் தனியார் பள்ளி அருகே, விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரின் மீதும், பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், சீதா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த முத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
படாளம் போலீசார் வழக்கு பதிந்து, பேருந்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தலைமறைவான பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த புதுார் மேடு கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 64. இவர் நேற்று காலை 100 நாள் வேலைக்காக டி.வி.எஸ். 50 எக்ஸ்.எல்., வாகனத்தில் சென்றார். புதுார் மேடு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அருகே, வேலுார் மாவட்டம், காட்பாடியில் இருந்து சோளிங்கர் நோக்கி வந்து கொண்டிருந்த கே.டி.எம்., பைக் மோதியது. இதில், மகேந்திரனும் எதிரில் பைக்கில் வந்த நபரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஆர்.கே.பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், கே.டி.எம்., பைக்கில் வந்தவர், காட்பாடியை சேர்ந்த உசேன், 24, என தெரியவந்தது.
மணலி: மணலி, சின்னசேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 22; எம்.ஜி.ஆர்., மருத்துவ கல்லுாரி, பிசியோதெரபி நான்காம் ஆண்டு மாணவர்.
கல்லுாரி முடித்து, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த நண்பர் நிதிஷ்குமாருடன் கே.டிஎம்., டியூக் பைக்கில், வீடு திரும்பினார். பைக்கை நிதிஷ்குமார் ஓட்ட, விக்னேஷ் பின்னால் அமர்ந்திருந்தார்.
புழல் அருகே மேம்பாலத்தில் வந்தபோது, வளைவில் திரும்புகையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பைக், மேம்பால தடுப்பு சுவரில் மோதியது.
இதில், மேம்பாலத்தின் 40 அடி உயரத்தில் இருந்து, இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் விக்னேஷ் பலத்த காயமடைந்தார். உடனடியாக புழல் நகர்ப்புற சமுதாய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது. நிதிஷ்குமார் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.