ADDED : ஜூலை 13, 2025 10:38 PM
திருத்தணி:திருத்தணி அருகே பொன்பாடி சோதனைச்சாவடியில், 24 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் கார், இருசக்கர வாகனங்களில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார், திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். நேற்று காலை திருப்பதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பேருந்தை சோதனை செய்த போது, நான்கு பேர் உடைமைகளில், 16 கிலோ கஞ்சா சிக்கியது.
விசாரணையில், மதுரையைச் சேர்ந்த அவினேஷ், 24, சதீஷ்குமார், 46, சுதாகர், 20, சிவகங்கையைச் சேர்ந்த பூபதிராஜா, 24, ஆகியோர் என, தெரிய வந்தது.
மேலும், நகரியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த பைக்கை சோதனை செய்ததில், 8 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில், திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த விக்னேஷ், 27, என தெரிந்தது. ஐந்து பேரையும் கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.