/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறைந்த மின் அழுத்தத்தால் மக்கள் தவிப்பு துணைமின் நிலையம் அமைவது எப்போது?
/
குறைந்த மின் அழுத்தத்தால் மக்கள் தவிப்பு துணைமின் நிலையம் அமைவது எப்போது?
குறைந்த மின் அழுத்தத்தால் மக்கள் தவிப்பு துணைமின் நிலையம் அமைவது எப்போது?
குறைந்த மின் அழுத்தத்தால் மக்கள் தவிப்பு துணைமின் நிலையம் அமைவது எப்போது?
ADDED : ஜூலை 13, 2025 10:39 PM
மீஞ்சூர்:மீஞ்சூரில் துணைமின்நிலைய திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் மின்வெட்டு, குறைந்த மின்னழுத்தம் காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள அரியன்வாயல், எடப்பாளையம், புதுப்பேடு, கேசவபுரம், நாலுார் உள்ளிட்ட பகுதிகளில், 23,000 குடியிருப்புகள், 1,600 கடைகள், 12 அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 10 தனியார் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என, 25,000க்கும் மேற்பட்ட மின் பயனீட்டாளர்கள் உள்ளனர்.
இங்கு, 6 கி.மீ., தொலைவில் உள்ள மேலுார் துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் நடைபெறுகிறது.
புறநகர் பகுதிகளில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ள பகுதியாக மீஞ்சூர் உள்ளது. இதனால், மீஞ்சூர் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், மேலுார் துணை மின்நிலையத்தில் இருந்து வினியோகிக்கப்படும் மின்சாரம், மேற்கண்ட குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு போதுமானதாக இல்லை.
அதிக மின் பயன்பாடு காரணமாக அடிக்கடி மின்வெட்டு, குறைந்த மின்னழுத்தம், மின்மாற்றிகள் பழுது என, மின் பிரச்னை தொடர்கதையாக உள்ளது.
மின்வெட்டு பிரச்னையால், மோட்டார்களை சரிவர இயக்க முடியாமல் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. பகல் நேர மின்வெட்டால், வியாபாரிகளின் வியாபாரம் பாதித்து, வருவாய் இழப்பிற்கு ஆளாகின்றனர்.
கோடைக்காலங்களில் மின்வெட்டு, குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளால், இன்னலுக்கு ஆளாகும் மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலை உள்ளது.
மீஞ்சூர் மக்களுக்கு சீரான மின்வினியோகம் வழங்க, புதிய துணைமின் நிலையம் அமைக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2015ல், மீஞ்சூர் பகுதியில், 33 கிலோவாட் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும் என, மின்வாரியம் தெரிவித்தது. அதற்கான எந்த ஒரு பூர்வாங்க பணிகளும் துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுத்து, துணைமின் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, குடியிருப்பு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, மீஞ்சூர் சுற்றுவட்டார மக்கள் நலக் கூட்டமைப்பு செயலர் ேஷக் அகமது கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக மீஞ்சூர் பகுதிவாசிகள், துணைமின் நிலையத்திற்காக காத்திருக்கின்றனர். மீஞ்சூர் நகரத்தின் அருகே உள்ள நாலுாரில், இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், வருவாய்த் துறையின் அனுமதிக்கு காத்திருப்பதாகவும், மின்வாரியம் தெரிவித்து வருகிறது.
மின்வெட்டால் மக்களின் இன்னல்கள் தீர்ந்தபாடில்லை. இதுவரை மூன்று எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு எம்.பி.,க்களின் பதவிக்காலங்களில், இது தொடர்பாக முறையிட்டு உள்ளோம். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை.
கடந்த சில நாட்களாக, சீரான மின் வினியோகம் இல்லை. மின்சாதனங்கள் பழுதடைகின்றன. மின் கட்டணம் உயரும் அளவிற்கு சேவைகள் இருப்பதில்லை.
இது, மக்களிடையே ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
துணைமின் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வதில், மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். அதன்பின், மின்வாரியம் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, துணைமின் நிலையம் அமைத்து, மின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.