/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் திறப்பு
/
கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் திறப்பு
கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் திறப்பு
கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் திறப்பு
ADDED : செப் 19, 2024 07:48 PM
ஊத்துக்கோட்டை:சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தமிழக -- ஆந்திர அரசுகள் இடையே, 1983ம் ஆண்டு தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தம் போடப்பட்டது.
இதன்படி, ஜனவரி -- ஏப்ரல் மாதங்களில், 4 டி.எம்.சி., ஜூன் -- ஆகஸ்ட் மாதங்களில், 8 டி.எம்.சி., என, மொத்தம், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் கொடுக்க வேண்டும்.
இதற்காக, கண்டலேறு அணையில் இருந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் வரை, 152 கி.மீட்டர் மற்றும் அங்கிருந்து, 25 கி.மீட்டர் துாரமுள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் வரை கால்வாய் வெட்டப்பட்டது.
இப்பணி, 13 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், 1996ம் ஆண்டு முதல் முறை கிருஷ்ணா நீர் தமிழத்திற்கு வந்தது. இவ்வாறு பெறப்படும் கிருஷ்ணா நீர் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நீர்த்தேக்கங்களில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து கால்வாய் வாயிலாக சென்னை குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, பின் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, சென்னை மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் குறைவாக இருந்தது. இதனிடையே, சோமசீலா நீர்த்தேக்கத்தில் இருந்து, வினாடிக்கு 8,300 கன அடி வீதம் தண்ணீர் கண்டலேறு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மொத்த கொள்ளளவு, 68 டி.எம்.சி., தற்போது, 13 டி.எம்.சி., நீர் உள்ளது. இதனால், ஒப்பந்தப்படி கிருஷ்ணா நீரை திறந்து விடுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
அதன்படி, நேற்று காலை 11:00 மணிக்கு கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 500 கன அடி வீதம் கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. வெங்கடகிரி தெலுங்கு தேச எம்.எல்.ஏ., கொரகண்டல ராமகிருஷ்ணா திறந்து வைத்தார்.
வினாடிக்கு, 500 கன அடி வீதம் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் படிப்படியாக அதிகரிக்கப்படும் என, ஆந்திர மாநில நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், வரும் 22ம் தேதி கிருஷ்ணா நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்டை வந்தடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.