/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சம்பா பருவத்திற்கு 67 நெல் கொள்முதல் நிலையங்கள்...திறப்பு!: முறைகேடில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை
/
சம்பா பருவத்திற்கு 67 நெல் கொள்முதல் நிலையங்கள்...திறப்பு!: முறைகேடில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை
சம்பா பருவத்திற்கு 67 நெல் கொள்முதல் நிலையங்கள்...திறப்பு!: முறைகேடில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை
சம்பா பருவத்திற்கு 67 நெல் கொள்முதல் நிலையங்கள்...திறப்பு!: முறைகேடில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை
ADDED : ஜன 08, 2025 12:55 AM

திருவாலங்காடு:சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடைக்கு வந்துள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்தில், 67 இடங்களில், அரசின் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நிலையங்களில், கூடுதல் தொகை வசூலிப்பு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, கடம்பத்தூர், திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, பூண்டி உட்பட 14 ஒன்றியங்கள் உள்ளன.
மாவட்டத்தில், 2 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில், பொன்னேரி, திருவாலங்காடு, பூண்டி ஆகிய ஒன்றியங்களில், அதிகளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது.
அதேபோல் பூண்டி நீர்த்தேக்கம், கொசஸ்தலை ஆற்றங்கரை பகுதியில், ஆழ்துளை கிணறுகள், கிணற்று நீராதாரங்களை பயன்படுத்தி, நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது சம்பா பருவத்தில், மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்யப்பட்டு, 16,750 ஏக்கர் நிலம் அறுவடைக்கு தயாராக உள்ளது.
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், கே.எம்.எஸ்., 2024- -- 25ம் ஆண்டு பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கவும், விவசாயிகளிடம் இருந்து, உடனடியாக நெல் கொள்முதல் செய்யவும், அரசு சார்பில் உத்தரவிடப்பட்டது.
விவசாயிகள் நலன் கருதி, சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 2,450 ரூபாயும், பொது ரக நெல் குவிண்டால் ஒன்றிற்கு 2,405 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும்போது, 17 சதவீதம் ஈரப்பதம் வரை உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில், எவ்வித முறைகேட்டிற்கும் இடமளிக்காத வகையில் பணிபுரிய வேண்டும்.
குறைபாடுகள் கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, உடனுக்குடன் சம்பந்தப்பட்ட கிடங்கு அல்லது நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்க, முதுநிலை மண்டல மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதற்கட்டமாக, திருவள்ளூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில், 67 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் திருவாலங்காடு ஒன்றியம் கூளூர் கிராமத்தில் கிராம சேவை மையத்தில் செயல்பட உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நேற்றுமுன்தினம் துவக்கி வைத்தார்.
இந்நிலையங்கள், ஜன., மாதம் துவங்கி, ஏப்., மாதம் வரை செயல்படும் என, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.