/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் 802 நாய்களுக்கு கருத்தடை
/
திருவள்ளூரில் 802 நாய்களுக்கு கருத்தடை
ADDED : ஜன 07, 2026 06:41 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், 460க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில், கடந்தாண்டு நகராட்சி கணக்கெடுப்பு நடத்தியதில், 3,502 தெரு நாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
திருவள்ளூர் நகராட்சி சார்பில், கடந்தாண்டு மார்ச் முதல், தெரு நாய்களை பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி துவங்கப்பட்டது. கடந்த டிச., இறுதி வரை, 802 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் தாமோதரன் மற்றும் சுகாதார அலுவலர் மோகன் கூறியதாவது:
திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை தனியார் நிறுவனம் வாயிலாக பிடித்து, அறுவை சிகிச்சை செய்ய, ஒரு நாய்க்கு, 1,950 ரூபாய் வழங்கப்படுகிறது.
நகராட்சி அலுவலகத்தில், வாரத்திற்கு 32 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்து, ஐந்து நாட்கள் கண்காணிப்பிற்கு பின், மீண்டும் அதே பகுதியில் விடப்படும்.
அதன்படி, திருவள்ளூர் நகராட்சி பகுதியில், இதுவரை 802 நாய்களுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
நேற்று, ராஜாஜிபுரம், பெரியகுப்பம், இந்திரா காந்தி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள, 16 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நாய்களும், படிப்படியாக பிடித்து, அறுவை சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

