/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தர்பூசணியை காக்க சத்தம் எழுப்பும் வேலி
/
தர்பூசணியை காக்க சத்தம் எழுப்பும் வேலி
ADDED : மார் 05, 2024 06:39 AM

கும்மிடிப்பூண்டி:இரவு நேரங்களில் பன்றி, கீரி, எலிகளிடம் இருந்து தர்பூசணி பழங்களை காக்க, காற்று அசைவின் போது சத்தம் எழுப்பும் 'பிளாஸ்டிக் ரோல்' வேலி அமைக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த, மாதர்பாக்கம் பகுதியை சுற்றியுள்ள, 35 கிராமவாசிகள், ஆண்டுதோறும் நடப்பு பருவத்தில், தர்பூசணி சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு தர்பூசணி பழங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதால், தர்பூசணி சாகுபடியில் பெரும்பாலான விவசாயிகள் இறங்கியுள்ளனர்.
விதை, அடி உரம், மேல் உரம், களை பறித்தல், பூச்சி மருந்து தெளிப்பது, ஈரப்பதம் குறையாமல் தண்ணீர் விடுதல் என, 1 ஏக்கர் பரப்பில் தர்பூசணி சாகுபடி செய்வதற்கு குறைந்தது, 20,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் வரை செலவாகிறது.
ஒரு ஏக்கருக்கு, ஆறு முதல், எட்டு டன் வரை, தர்பூசணி விளைகிறது. எதிர்பார்த்தபடி விளைச்சல் கிடைத்தும், இரவு நேரத்தில் பன்றிகள், கீரிகள், எலிகள் நிலத்திற்குள் புகுந்து, தர்பூசணி பழங்களை சூறையாடுவதால் சாகுபடி பாதிக்கப்படுகிறது.
அதற்கு தீர்வு காணும் விதமாக, காற்றின் அசைவில் சத்தம் எழுப்பும் 'பிளாஸ்டிக் ரோல்'களை வேலியாக அமைத்துள்ளனர்.
இது குறித்து விசவாயி ஒருவர் கூறுகையில், 'இரவு நேரத்தில் காற்றின் வேகத்திற்கு ஏற்ப பிளாஸ்டிக் ரோல் எழுப்பும் சலசலப்பு சத்தத்தால், பன்றி, கீரி, எலிகள் வேலியை தாண்டி உள்ளே வருவதில்லை. அதன் மூலம், தர்பூசணி பழங்களை காத்து வருகிறோம்' என்றார்.

