/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு மருத்துவமனையில் மீண்டும் ஆவின் பாலகம்
/
அரசு மருத்துவமனையில் மீண்டும் ஆவின் பாலகம்
ADDED : நவ 11, 2025 07:55 PM
திருவள்ளூர்: மூன்று ஆண்டுகளுக்கு பின், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஆவின் பாலகம் திறக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ஜே.என்.சாலையில் இயங்கி வருகிறது. அரசு மருத்துவமனையில் இருந்து, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின், அங்கிருந்த பழைய கட்டடம் அகற்றப்பட்டு, ஆறு மாடி கட்டடம் கட்டப்பட்டு, 2022 முதல் பயன்பாட்டில் உள்ளது.
பழைய கட்டடம் அகற்றும்போது, அங்கு செயல்பட்டு வந்த அம்மா உணவகம், ஆவின் பாலகம் ஆகியவையும் இடிக்கப்பட்டன. அதன்பின், புதிய கட்டடம் திறந்து செயல்பாட்டிற்கு வந்து, மூன்று ஆண்டுகளாகியும், அம்மா உணவகம் மற்றும் ஆவின் பாலகம் போன்றவை திறக்கப்படாமல் உள்ளன.
இதனால், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள், சாலையை கடந்து சென்று, உணவு மற்றும் வெந்நீர் பெற்று வந்தனர்.
எனவே, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மீண்டும் அம்மா உணவகம் மற்றும் ஆவின் பாலகம் திறக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
தற்போது, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு அருகே ஆவின் பாலகத்தை, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் நேற்று திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
இதில், மருத்துவ கல்லுாரி முதல்வர் ரேவதி, துணை முதல்வர் திலகவதி, ஆவின் பொது மேலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

