/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழையில் இருந்து பயிர்களை பாதுகாக்க ஆலோசனை
/
மழையில் இருந்து பயிர்களை பாதுகாக்க ஆலோசனை
ADDED : அக் 17, 2024 10:45 PM
திருவள்ளூர்:வடகிழக்கு பருவமழையால் நெல் பயிரை பாதுகாக்க வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
வேளாண்மை இணை இயக்குநர்முருகன்விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில், 53,891 ஏக்கர் நெல் நடவு செய்யப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால், வயல்களில் நீர் தேங்கி பயிர் சேதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
வயல்களில் தேங்கும் அதிகப்படியான மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும். மழையால் மண்ணிலிருந்து அடித்து செல்லப்படும், 'நைட்ரஜன்' மற்றும் 'பொட்டாசியம்' சத்துக்களை ஈடுசெய்ய 25 சதவீதம் கூடுதலாக 'யூரியா' மற்றும் 'பொட்டாஷ்' உரம் இட வேண்டும்.
நுண்ணுாட்டச் சத்து குறைபாடு காணப்பட்டால் யூரியா மற்றும் நுண்ணுாட்ட உரங்களை இலை வழியாக தெளிக்கவும். அறுவடை நிலையில் உள்ள நெல் வயல்களில் மழைநீரை வடித்த பிறகு, மேலுரமாக ஏக்கருக்கு யூரியா 22 கிலோ, ஜிப்சம் 18 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 4 கிலோ இடுவதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்யலாம்.
இளம்பயிர் மற்றும் துார் கட்டும் பயிர்களை பாதுகாக்க, ஏக்கருக்கு ஒரு கிலோ துத்தநாக சல்பேட் மற்றும் 2 கிலோ யூரியாவை 200 லிட்டர் நீரில் ஒரு இரவு வைத்து மறுநாள், மழை நின்ற உடன் தெளிக்கலாம். பூச்சி நோய் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல் ஏற்பட்டால் வேப்ப எண்ணெய் 3 லிட்டரை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.