/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெற்பயிர்களில் பூச்சி தாக்குதல் வேளாண் துறை ஆலோசனை
/
நெற்பயிர்களில் பூச்சி தாக்குதல் வேளாண் துறை ஆலோசனை
நெற்பயிர்களில் பூச்சி தாக்குதல் வேளாண் துறை ஆலோசனை
நெற்பயிர்களில் பூச்சி தாக்குதல் வேளாண் துறை ஆலோசனை
ADDED : நவ 06, 2025 02:49 AM
பொன்னேரி: பூச்சி, புகையான் தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க, வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
மீஞ்சூர் வேளாண் வட்டாரத்தில், சம்பா பருவத்திற்கு, 30,000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது, ஒரு சில கிராமங்களில் நெற்பயிர்களில் தண்டு துளைப்பான், புகையான் மற்றும் இலை சுருட்டுப்புழு ஆகியவற்றின் தாக்குதலால் பயிர்கள் பாதிப்படையும் சூழல் உள்ளது.
இதுதொடர்பாக, மீஞ்சூர் வேளாண் உதவி இயக்குநர் டில்லிகுமார் கூறியதாவது:
தண்டு துளைப்பான் தாக்குதலில் பயிர்களின் நடுப்பகுதி கருகி காய்ந்துவிடும். நெல்மணிகள் பால்பிடிக்காமல் பதராகி வெண்கதிர்களாக மாறும்.
இலை சுருட்டுப்புழு, நெற்பயிர்களின் இலைகளில் பச்சையத்தை சுரண்டும்போது வெண்மையாக மாறும். புகையான் பாதிப்பு இருந்தால், பயிர்கள் திடீரென மஞ்சளாக மாறி காய்ந்துவிடும். விளைநிலங்களில் பாசி வளர்ச்சி அதிகரிக்கும்போது பயிர்கள் கருகிவிடும்.
தண்டு துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்த, 1 ஏக்கருக்கு புளுபென்டியமைடு 20 சதவீதம், டி.எ., 50 கிராம் அல்லது கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50 சதவீதம், எஸ்.பி., 400 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
புகையான் தாக்குதலை கட்டுப்படுத்த, 1 ஏக்கருக்கு பைமெட்ரோசின் 50 சதவீதம் இலை வழியாக தெளிக்கலாம். வயல்களில் பாசி படர்ந்திருந்தால், 1 ஏக்கருக்கு 1 கிலோ காப்பர் சல்பைடு, 20 கிலோ மணலுடன் தண்ணீர் பாயக்கூடிய இடங்களில், பைகளில் கட்டி வைக்க வேண்டும்.
மேலும், 1 ஏக்கருக்கு, 1 கிலோ, 19:19:19 காம்பளக்ஸ் உரத்தை தெளிக்கலாம். பசுந்தாள் உரப்பயிர்களை பயன்படுத்தலாம். யூரியா, டி.ஏ.பி., உரங்களை, பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.
பூச்சி, நோய் தாக்குதல் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம். வேளாண் அலுவலரை தொடர்பு கொண்டும் ஆலோசனை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

