/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காட்டுப்பன்றியால் சேதமான பயிர்கள் இழப்பீடை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு
/
காட்டுப்பன்றியால் சேதமான பயிர்கள் இழப்பீடை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு
காட்டுப்பன்றியால் சேதமான பயிர்கள் இழப்பீடை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு
காட்டுப்பன்றியால் சேதமான பயிர்கள் இழப்பீடை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு
ADDED : நவ 06, 2025 02:46 AM
திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகள் கரும்பை சேதப்படுத்துவதால், விவசாயிகள் அதிகளவில் இழப்பை சந்தித்து வருகின்றனர். மேலும், பயிர் சேதத்திற்கு குறைவான தொகையை மட்டுமே வனத்துறை வழங்குகிறது. அதை, அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு, பேரம்பாக்கம், அரக்கோணம், அத்திமாஞ்சேரிபேட்டை, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து கரும்பு வரவழைக்கப்பட்டு அரவை செய்யப்படுகிறது.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்டு, 7,000 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது. பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவா லங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதாக, அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வாடிக்கை கடந்தாண்டு காட்டுப்பன்றியால் சேதமடைந்த பயிர்களுக்கு, சொற்ப அளவில் மட்டுமே இழப்பீடு வழங்கியதாகவும், இந்த முறையும் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உரிய இழப்பீடு வேண்டி, திருத்தணி ஆர்.டி.ஓ., திருவள்ளூர் கலெக்டரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கரும்பு விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் ஸ்ரீநாத் கூறியதாவது:
திருத்தணி வனத்துறைக்கு உட்பட்டு, 40க்கும் மேற்பட்ட குறுங்காடுகள் உள்ளன. அங்கு, காட்டுப்பன்றிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவை, உணவு தேடி விவசாய நிலங்களுக்கு வருவதும், அங்குள்ள பயிர்களை சேதப்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.
நஷ்டம் தற்போது வரை காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்தாண்டு, எனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் விளைந்த 60 டன் கரும்பை, காட்டுப்பன்றி சேதப்படுத்தியதால், 1.80 லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்தேன்.
வனத்துறை சார்பில், 1,500 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. விவசாயிகளுக்காக வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 40,000 கோடி எங்கே போகிறது என தெரியவில்லை. விவசாயிகளுக்கு அவை முழுமையாக சென்று சேருவதில்லை.
மாறாக, மானியம் என்ற பெயரில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பாக்கெட்டிற்கு செல்கிறது. காட்டுப்பன்றி மற்றும் இயற்கை பேரிடரால் ஏற்படும் சேதத்திற்கு, இழப்பீட்டை உயர்த்தி வழங்க, திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால், கடந்த முறை காட்டுப்பன்றியால் நஷ்டமடைந்த பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு பகுதிகளை உள்ளடக்கிய 200க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஒன்றிணைத்து, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் அலுவலகம் முன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
அதில் வரும் பணத்தை, வனத்துறைக்கு அளிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

