/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அதிக வருவாய் பெற மக்காச்சோளம் பயிரிடலாம் * விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
/
அதிக வருவாய் பெற மக்காச்சோளம் பயிரிடலாம் * விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
அதிக வருவாய் பெற மக்காச்சோளம் பயிரிடலாம் * விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
அதிக வருவாய் பெற மக்காச்சோளம் பயிரிடலாம் * விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
ADDED : டிச 27, 2024 02:06 AM

ஊத்துக்கோட்டை:நெல் உள்ளிட்ட பிற பயிர்கள் பயிரிடும் விவசாயிகள், நல்ல வருவாய் கிடைக்கும் என்பதால், மாற்று பயிராக மக்காச்சோளம் பயிரிட வருமாறு, வேளாண்மை துறை அழைப்பு விடுத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை தொழிற்பூங்காவில் உள்ள எஸ்.எல்.பி., எத்தனால் தொழிற்சாலை வளாகத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலையின் அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் -- மக்காச்சோளம் மற்றும் வேளாண்மை துறை இணைந்து, மக்காச்சோளம் சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கை நேற்று நடந்தின.
இதில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலை சிறுதானியங்கள் துறை பேராசிரியர் மற்றும் தலைவர், முனைவர் சிவகுமார் தலைமை வகித்தார். திரூர்குப்பம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பானுமதி வரவேற்றார்.
திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கலாதேவி முன்னுரை வழங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளரும், வேளாண் இணை இயக்குனருமான மோகன் சிறப்புரை ஆற்றினார்.
முனைவர்கள் குமாரிவினோதணி, சிவகாமி, கதிர்வேலன், சீனிவாசன், பரணீதரன் ஆகியோர் மக்காச்சோளம் பயிரிடுதல், பயிர்பாதுகாப்பு, பூச்சிகளில் இருந்து காத்தல் உள்ளிட்டவை குறித்த விரிவாக எடுத்துக் கூறினர்.
இதில் பேசிய வேளாண்மை துறை அதிகாரிகள், 'கோழி தீவனம், ஸ்டார்ச் தயாரித்தலுக்கு தேவைப்பட்ட மக்காச்சோளம், தற்போது எத்தனால் தயாரித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை பயிரிட குறைந்தளவு நீர் போதும். இயந்திரம் வாயிலாக விதை பயிரிடுதல் முதல் அறுவடை வரை செய்யலாம். ஆட்கள் தேவை குறைவு.
'மக்காச்சோளம் பயிடும்போது, பயிர் வகைகளையும் கூடுதலாக பயிரிடலாம். 100 - 110 நாட்கள் இதன் பயிர்காலம். தேவை அதிகமாக உள்ளதால், அதிக லாபம் கிடைக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். முதல் இரண்டு போகம் நெல் பயிரிட்ட பின், மூன்றாம் போகமாக பயிரிடலாம்' என்றனர்.
எஸ்.எல்.பி., எத்தனால் தொழிற்சாலை இணை இயக்குனர் ஆர்.சீனிவாசன் பேசியதாவது:
வரும், 2025ம் ஆண்டிற்குள், பெட்ரோலுடன், 20 சதவீதம் எத்தனால் கலக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வருங்காலத்தில் எத்தனால் தயாரிக்க மக்காச்சோளம் தேவை அதிகமாக இருக்கும். தற்போது, எங்கள் ஒரு நிறுவனத்திற்கு மட்டும் நாள் ஒன்றுக்கு, 500 டன் மக்காச்சோளம் தேவை உள்ளது.
தமிழகத்தில், இதுபோன்ற பல தொழிற்சாலை வர உள்ளன. அதற்கான தேவை இன்னும் அதிகரிக்கும். தற்போது, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து, மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்படுகிறது. கோவில்பட்டி, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி ஆகிய பகுதிகளில், எத்தனால் உற்பத்திக்காக பல ஆயிரம் ஏக்கரில், மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.
இங்குள்ள விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டால், மார்க்கெட்டில் உள்ள விலை கொடுத்து, இடைத்தரகர் இன்றி நாங்கள் பெற்றுக் கொள்வோம். வேளாண்மை துறை அதிகாரிகள் ஆலோசனை கேட்டு, அதிகளவில் மக்காச்சோளம் பயிரிட்டு வருமானம் அடையலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து, கலந்து கொண்ட விவசாயிகளுக்கு, 4,000 மதிப்புள்ள, 8 கிலோ மக்காச்சோளம் விதை, களை கொல்லி, நுண்ணுயிர் உரம், பூச்சி மருந்து, நுண்ணுாட்ட சத்து உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு, 50 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இறுதியில் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் ரமேஷ் நன்றி கூறினார்.
விவசாயிகள் பேட்டி:
முருக்கம்பட்டு கிராமத்தில், 6 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு வருகிறோம். வேளாண் அதிகாரிகள் எங்களை அழைத்து, மக்காச்சோளம் பயிரிடுவது குறித்து, விரிவாக கூறினர். தற்போது, 4 ஏக்கரில் நெல் பயிரிட்டு உள்ளேன். மீதமுள்ள நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட உள்ளேன். வருமானம் அதிகமாக இருந்தால், 6 ஏக்கரிலும் மக்காச்சோளம் பயிரிட முயற்சி எடுப்பேன்.
-- எஸ்.பாப்பம்மாள்,
முருககம்பட்டு, திருத்தணி.
கலந்துரையாடல் நிகழ்ச்சியில், வேளாண் அதிகாரிகள் மக்காசோளம் பயிரிடுவது முதல் அறுவடை வரை தெளிவாக கூறினர். நாங்களும் பயிரிடுவது மற்றும் அதை விற்பனை செய்வது குறித்து, கேட்டறிந்தோம். வரும் ஜனவரி மாதம் பயிரிட உள்ளேன். வருவாயை பொறுத்து தொடர்ந்து பயிரிடுவேன்.
- சி.பெருமாள்,
ருக்மணிபுரம், ஆர்.கே.பேட்டை.