/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துாரில் அத்திமரத் தோட்டம் 'அம்போ'
/
கடம்பத்துாரில் அத்திமரத் தோட்டம் 'அம்போ'
ADDED : டிச 19, 2024 12:35 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், புதுமாவிலங்கை ஊராட்சியில், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில், 8 ஆண்டுகளில் அதிக விளைச்சல் தரும் உயர்ந்த ரக அத்தி மரம் நடும் பணி, 2019ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் துவக்கப்பட்டது.
இதில், அப்போதைய கடம்பத்துார் ஒன்றிய அலுவலர்கள் அருள், சுந்தரவதனம் ஆகியோர் முன்னிலை வகிக்க, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஜெயகுமார் தலைமையில் அப்போதைய மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அத்தி மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட அத்திமரக்கன்றுகள் நடப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும் போதிய பராமரிப்பில்லாததால் அத்திமரக் கன்றுகள் வைக்கப்பட்ட சுவடே தெரியாமல் வீணாகி போயுள்ளது.
இதற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் அலட்சிய போக்கே காரணம் என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த அத்திமரத் தோட்டம் அமைந்துள்ள பகுதியை சுற்றி கருங்கல் துாண்கள் அமைத்த வேலி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதுமாவிலங்கை ஊராட்சியில் ஆய்வு செயது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கடம்பத்துார் ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''புதுமாவிலங்கை ஊராட்சியில் அத்திமரத் தோட்டம் அமைக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.