/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆங்கர் செய்தி புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மைய பணிகள் துவக்கம் நன்னீராக மாற்றி புட்லுார் ஏரியில் வெளியேற்ற திட்டம்
/
ஆங்கர் செய்தி புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மைய பணிகள் துவக்கம் நன்னீராக மாற்றி புட்லுார் ஏரியில் வெளியேற்ற திட்டம்
ஆங்கர் செய்தி புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மைய பணிகள் துவக்கம் நன்னீராக மாற்றி புட்லுார் ஏரியில் வெளியேற்ற திட்டம்
ஆங்கர் செய்தி புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மைய பணிகள் துவக்கம் நன்னீராக மாற்றி புட்லுார் ஏரியில் வெளியேற்ற திட்டம்
ADDED : மார் 21, 2025 11:52 PM

திருவள்ளூர், திருவள்ளூரில் ஏற்கனவே இருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் செயல்பாட்டில் இல்லாத நிலையில், புதிதாக 10.48 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மையம் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி, கழிவுநீரை மும்முறை சுத்தம் செய்து, நன்னீராக மாற்றி, புட்லுார் ஏரியில் வெளியேற்றும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் நகராட்சியில், கடந்த 2008ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டப்பணி, 55 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கப்பட்டது. அப்போது, நகரில், 11,907 கட்டடங்கள் இருந்தன. அதற்கேற்ற வகையில், நகரில், 86.97 கி.மீ.,க்கு குழாய் பதிக்கப்பட்டது. இப்பணி, 2013 முதல் நிறைவடைந்து, தற்போது செயல்பாட்டில் உள்ளது.
நகராட்சியில் இதுவரை, 7,000 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சேகரிக்க, மூன்று இடங்களில் கழிவுநீர் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கழிவுநீர், தேவி மீனாட்சி நகரில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர், புட்லுார் ஏரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்போது, ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், வெளியேற்றப்படும் கழிவுநீர் மீண்டும் சுத்திகரிப்பு மையத்தைச சுற்றி தேங்கியுள்ளது. இந்த நிலையில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் உள்ள இயந்திரம் முறையாக வேலை செய்யாததால், சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீர் அப்படியே குழாய் வாயிலாக வெளியேறி வருகிறது.
மேலும், நகரில் ஆங்காங்கே பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கி வருகிறது. சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு வரப்படும் கழிவுநீரை, சுத்தமான குடிநீராக மாற்றி, கூவம் ஆற்றில் விடப்படும் வகையில் நவீன திட்டம் தயாரிக்கப்பட்டது.
இதற்காக, தமிழக அரசு 10.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியில், 2023 பிப்., மாதம் நவீன சுத்திகரிப்பு திட்ட பணி துவங்கியது. இதற்காக, ஏற்கனவே உள்ள சுத்திகரிப்பு மையம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது.
அந்த இடத்தில் இருந்த, 17 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டது. தொடர்ந்து, புதிய சுத்திகரிப்பு மைய கட்டுமான பணி துவங்கியது. ஆனால், அப்பணி மேற்கொண்டு தொடராமல் அப்படியே நின்று விட்டது.
இதையடுத்து, நவீன சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணியை எடுத்த ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட பணி ஆணையை, திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம், கடந்த ஜன., மாதம் அதிரடியாக ரத்து செய்தது. பின், அதே மாத இறுதியில், புதிய ஒப்பந்தம் கோரப்பட்டு, தற்போது புதிய நிறுவனத்திற்கு கட்டமான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி தலைவர் உதயமலர் கூறியதாவது:
திருவள்ளூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில், புட்லுார் ஏரி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டி, 12 ஆண்டுகளாகிறது. தற்போது அம்மையத்தில், கழிவுநீர் சரிவர சுத்திகரிப்பு செய்ய இயலவில்லை.
அந்த மையத்தின் அருகிலேயே, நவீன முறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம், 10.48 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. அதன்படி, நவீன முறையில், சுத்திகரிப்பு தொட்டி கட்டப்பட்டு, மும்முறை கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, நன்னீராக வெளியேற்றப்படும்.
அந்த நன்னீரில் எவ்வித துர்நாற்றமும் இருக்காது. இந்த தண்ணீர் ஏரியில் கலப்பதால், சுற்றுச்சூழலும் பாதிக்காது. அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கும் எவ்வித துர்நாற்றமும் வீசாது.
இவ்வாறு அவர் கூறினார்.