/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசு உற்பத்தியாகும் இடமாக மாறிய திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கு உதவி இயக்குநர் அதிர்ச்சி
/
கொசு உற்பத்தியாகும் இடமாக மாறிய திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கு உதவி இயக்குநர் அதிர்ச்சி
கொசு உற்பத்தியாகும் இடமாக மாறிய திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கு உதவி இயக்குநர் அதிர்ச்சி
கொசு உற்பத்தியாகும் இடமாக மாறிய திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கு உதவி இயக்குநர் அதிர்ச்சி
ADDED : நவ 06, 2025 03:16 AM

ஊத்துக்கோட்டை: திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கில் தேங்கியுள்ள நீரில், கொசுக்களை கண்ட மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் அதிர்ச்சி அடைந்தார்.
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பஜார், திருவள்ளூர், நாகலாபுரம், சத்தியவேடு உள்ளிட்ட சாலைகள் உள்ளன.
இங்குள்ள வணிக நிறுவனங்கள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல சாலையோரம் கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.
மேலும், கழிவுநீர் அருகே பழங்கள் விற்கப் படுவதால், அதை சாப்பிடும் மக்கள் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டது.
ஊத்துக்கோட்டை பேரூராட்சி, உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறை அதிகாரிகள் கண்டும், காணாமல் இருந்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து, மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் ஜெயகுமார், நேற்று ஆய்வு மேற் கொண்டார். கால்வாய் அடைப்பு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்து, சீரமைக்க உத்தரவிட்டார். பின், திடக்கழிவு மேலாண்மை திட்ட கிடங்கிற்கு சென்றார்.
கிடங்கை சுற்றி மழைநீர் தேங்கி, அதில் கொசுக்கள் உற்பத்தியாகி இருப்பதை கண்டார். மேலும், செடிகள் வைத்துள்ள இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. ஆங்காங்கே குப்பையாக குவிந்திருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உதவி இயக்குநர் ஜெயகுமார், “இங்கு பணிகள் நடக்கிறதா, இல்லையா? இங்கு உருவாகும் கொசுக்களால் நோய் பரவும். உடனே சரிசெய்யவில்லை எனில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரித்தார்.
செயல் அலுவலருக்கு
கூடுதல் பொறுப்பு
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், செயல் அலுவலராக பணியாற்றும் சதீஷ், திருமழிசை பேரூராட்சிக்கு பொறுப்பு அதிகாரியாக உள்ளார். இதனால், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு மாதத்திற்கு சில நாட்கள் மட்டுமே வருவதால், ஊழியர்களை கவனிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமித்தால் மட்டுமே பணிகள் நடைபெறும்.

