தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/காக்களூர் ஏரிக்குள் கழிவுநீரை வெளியேற்றி மக்கள் அட்டூழியம்! குப்பை கழிவுகளும் கொட்டப்படுவதால் துர்நாற்றம்

காக்களூர் ஏரிக்குள் கழிவுநீரை வெளியேற்றி மக்கள் அட்டூழியம்! குப்பை கழிவுகளும் கொட்டப்படுவதால் துர்நாற்றம்

காக்களூர் ஏரிக்குள் கழிவுநீரை வெளியேற்றி மக்கள் அட்டூழியம்! குப்பை கழிவுகளும் கொட்டப்படுவதால் துர்நாற்றம்


UPDATED : செப் 01, 2026 10:43 PM

ADDED : செப் 01, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2026 10:43 PM ADDED : செப் 01, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:திருவள்ளூர் நகரின் நிலத்தடி நீராதாரமாக திகழும் காக்களூர் ஏரியில், சுற்றியுள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் இருந்து, குழாய் மூலம் கழிவு நீரை வெளியேற்றும் அட்டூழியம் நடந்து வருகிறது.

இறைச்சி கழிவுகள், குப்பைக் கழிவுகளும் கொட்டப்படுவதால், ஏரி நீர் மாசடைந்து, நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுர் ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில் காக்களூர் ஏரி, 194 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரி நிரம்பினால், காக்களூர் ஊராட்சி, திருவள்ளூர் நகராட்சி மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள் என, சுற்றியுள்ள 4 கி.மீ., துாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில், நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும்.

கடந்த, 30 ஆண்டுக்கு முன் வரை, இந்த ஏரி நீரை காக்களூர் மற்றும் சுற்று வட்டார விவசாயிகள், சாகுபடிக்கு பயன்படுத்தி வந்தனர். ஏரி நிரம்பினால், உபரி நீர் இரண்டு கலங்கள் வழியாக திறக்கப்பட்டு, அருகில் உள்ள தண்ணீர்குளம், ஈக்காடு உள்ளிட்ட ஏரிகளுக்கு திறந்து விடப்படும்.

கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன், ஏரியை ஒட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உருவாக்கப்பட்டது. குடியிருப்பில், 3,000க்கும் மேற்பட்ட வீட்டு மனைகள் மற்றும் வணிக வளாகங்கள் உருவாகின.

ஊரக வளர்ச்சி துறை சார்பில், 'நமக்கு நாமே' திட்டம், ஊராட்சி ஒன்றிய பொது நிதி, தனியார் நிறுவன சமூக பங்களிப்பு நிதி, சுற்றுச்சூழல் பொறுப்பு நிதி என, 2.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காக்களூர் ஏரி சமீபத்தில் சீரமைக்கப்பட்டது.

அங்கு, பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை, மின் விளக்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, உடற்பயிற்சி சாதனங்கள், 'செல்பி பாயின்ட்' ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. ஏரிக்கரையில், மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் நகரில் பொழுது போக்குவதற்கு இடம் இல்லாத நிலையில், தற்போது பொதுமக்கள், குழந்தைகள் என, தினமும் நுாற்றுக்கணக்கானோர், மாலை நேரத்தில், காக்களூர் ஏரிக்கு வந்து இளைப்பாறி செல்கின்றனர். மேலும், படகு சவாரி விட வசதியாக, ஏரியை ஆழப்படுத்தும் பணியை, மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

இந்நிலையில், காக்களூர், திருவள்ளூர் நகரைச் சுற்றிலும் உள்ள கோழி இறைச்சிக் கடைக்காரர்கள், தங்கள் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை, ஏரிக்கரையை ஒட்டி, மூட்டை, மூட்டையாக கொட்டி வருகின்றனர்.

ஏரியை சுற்றியுள்ள வீட்டு வசதி வாரியம் குடியிருப்புகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்ற போதிய வசதி ஏற்படுத்தாததால், குழாய் மூலம் ஏரிக்குள் கழிவு கலக்க விடும் செயல் நடக்கிறது.

இதனால், நீர் மாசடைந்து, ஏரியில் உள்ள மீன்களும் செத்து மிதப்பதால், அப்பகுதியைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசி, மக்களுக்கு நோய் பரப்பும் மையமாக மாறி வருகிறது.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சி பகுதிகளில், நிலத்தடி நீராதாரமாக திகழ்ந்த காக்களூர் ஏரி, அருகில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் காரணமாக, மாசடைந்துவிட்டது. நிலத்தடி நீரும் மாசுபட்டு, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வாரிய குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும். வீடுகளில் இருந்து கழிவுநீர் கலப்பு, குப்பை கழிவுகள் ஏரிக்குள் கொட்டப்படுவதை தவிர்க்க, திருவள்ளூர் கலெக்டர் நடவடிக்கை வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us