/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நுாறு நாள் வேலை முறைகேடு தவிர்க்க புதிய செயலியில் வருகை பதிவேடு
/
நுாறு நாள் வேலை முறைகேடு தவிர்க்க புதிய செயலியில் வருகை பதிவேடு
நுாறு நாள் வேலை முறைகேடு தவிர்க்க புதிய செயலியில் வருகை பதிவேடு
நுாறு நாள் வேலை முறைகேடு தவிர்க்க புதிய செயலியில் வருகை பதிவேடு
ADDED : ஜன 30, 2025 10:58 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், மொத்தம் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மத்திய அரசின் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ், நுாறு நாள் வேலை வழங்கப்படுகிறது.
இதற்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, நுாறு நாள் அட்டை வழங்கி, வேலை வழங்கப்பட்டு வருகிறது.
ஊராட்சிகளில் குளம் வெட்டுதல், கட்டடம் கட்டுதல், நீர்வரத்து கால்வாய் சீரமைத்தல் உட்பட, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில், பெரும்பாலான ஊராட்சிகளில், போலியான பெயர்களில் நுாறு நாள் அட்டை பெற்று, அவர்கள் வேலைக்கு வராமலேயே கூலித் தொகையாக வங்கி கணக்கின் வாயிலாக பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தடுக்கும் வகையில், நுாறு நாள் வேலைக்கு வரும் தொழிலாளர்கள் பணிக்கு வந்து வேலை செய்யும் போதும், பின் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போதும், மொபைல் போன் வாயிலாக புகைப்படம் எடுத்து, ஒன்றிய நிர்வாகத்திற்கு அனுப்ப வேண்டும் என, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட அலுவலர் உத்தரவிட்டார்.
இது, சில ஆண்டுகளாக நடைமுறையில் வந்தது. இதிலும், ஒருவரே இருமுறை நின்று புகைப்படம் எடுத்தும், வேலைக்கு குறிப்பிட்ட தொழிலாளர்கள் வந்ததாக, ஊராட்சி தலைவர்கள், பணி தள பொறுப்பாளர்கள் உதவியுடன் கூலித் தொகை பெறப்பட்டு வந்தது.
இதை தடுக்கும் வகையில், கடந்த 20ம் தேதி, மாவட்ட நிர்வாகம் சார்பில், புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் வாயிலாக முறைகேட்டை தடுக்க முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி கூறியதாவது:
கடந்த பொங்கல் பண்டிகைக்கு முன் வரை, மொபைல் போனில் தொழிலாளர்களை புகைப்படம் பிடித்து, செயலி வாயிலாக அனுப்பி விடலாம்.
மேலும், அன்றைய வேலைக்கு வராதவர்கள் பெயர்களும், வருகை பதிவேட்டில் பதிவிட்டு பணம் பெறலாம். இந்த வசதியால், பல ஊராட்சிகளில் முறைகேடுகள் செய்யப்பட்டன.
இதை தடுக்கும் வகையில், கடந்த 20ம் தேதி முதல், ஒரு நாளைக்கு நுாறு நாள் வேலைக்கு தேர்வு செய்யப்படும் ஆட்கள் அனைவரும், தனித்தனியாகவும், குழுவாகவும் மொபைல் போனில் புகைப்படம் எடுக்க வேண்டும்.
வேலைக்கு வந்தவர்கள் எண்ணிக்கையும், புகைப்படத்தில் உள்ளவர்கள் எண்ணிக்கையும் சரியாக இருந்தால், செயலி வாயிலாக வருகை பதிவேட்டில் குறிக்க முடியும்.
ஒருவரே இரு முறை புகைப்படம் பிடிக்க முடியாது. மேலும், காலையில் வந்து வேலை முடியாமல் வீட்டிற்கு செல்வோருக்கு, ஆப்சென்ட் போட்டு கூலி பிடித்தம் செய்யப்படும்.
இதனால், போலி நுாறு நாள் அட்டைகள் தவிர்க்கப்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

