ADDED : ஜூன் 13, 2025 02:52 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் கூவம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள மேம்பால தடுப்புச் சுவற்றில், 'போஸ்டர்' ஒட்டுவதை தடுக்க, நெடுஞ்சாலை துறையினர் அழகிய ஓவியம் வரைந்துள்ளனர்.
திருவள்ளூர்-மணவாளநகர் இடையே கூவம் ஆற்றின் குறுக்கே, மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில், அரசியல் கட்சியினர், விளம்பரம் செய்தும், 'போஸ்டர்' ஒட்டியும் வருகின்றனர். இதனால், மேம்பால சுவர், அலங்கோலமாகி வருகிறது. இதையடுத்து, நெடுஞ்சாலை துறையினர், மேம்பால தடுப்புச் சுவரில் போஸ்டர் ஒட்டுவதையும், விளம்பரங்கள் வரைவதை தடுக்கும் வகையில், அழகிய ஓவியங்களை வரைந்து, அழகுபடுத்தி உள்ளனர்.
தடுப்புச் சுவரின் இரண்டு பகுதியிலும், பூண்டி நீர்தேக்கம், பழவேற்காடு முகத்துவாரம், கன்னியாகுமரி கண்ணாடி மேம்பாலம் மற்றும் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிகட்டு, கலாசாரம் என, பலவகையான வண்ண ஓவியங்களை வரைந்துள்ளனர். இந்த ஓவியங்கள் சாலையில் பயணம் செய்வோரை வெகுவாக கவர்ந்துள்ளது.
இனியாவது, அரசியல் கட்சியினர் மேம்பால தடுப்புச் சுவரில் 'போஸ்டர்' ஒட்டுவதையும், விளம்பரங்களை வரைவதையும், தவிர்க்க வேண்டும்; மேலும், இந்த நிலையை தொடரும் வகையில், நெடுஞ்சாலை துறையினர் கண்காணிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.