/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்விளக்குகள் இல்லாத பாலம் வாகன ஓட்டிகள், மக்கள் அச்சம்
/
மின்விளக்குகள் இல்லாத பாலம் வாகன ஓட்டிகள், மக்கள் அச்சம்
மின்விளக்குகள் இல்லாத பாலம் வாகன ஓட்டிகள், மக்கள் அச்சம்
மின்விளக்குகள் இல்லாத பாலம் வாகன ஓட்டிகள், மக்கள் அச்சம்
ADDED : நவ 10, 2025 10:58 PM

பொன்னேரி: மடியூர் - நாலுார் கம்மவார்பாளையம் இடையே உள்ள கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால், கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மடியூர், வழுதிகைமேடு, பசுவன்பாளையம், கண்ணியம்பாளையம், அட்டப்பாளையம், நெற்குன்றம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு தேவைகளுக்கு பொன்னேரி வந்து செல்கின்றனர்.
இந்த கிராமங்களுக்கும், பொன்னேரிக்கும் இடையே கொசஸ்தலை ஆறு பயணிக்கிறது.
இக்கிராமங்களின் நீண்டநாள் கோரிக்கையின் பயனாக, மடியூர் - நாலுார் கம்மவார்பாளையம் கிராமங்களுக்கு இடையே, 18.50 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டப்பட்டு, ஆறு மாதங்களுக்கு முன் பயன்பாட்டிற்கு வந்தது.
அதேசமயம், மேம்பாலத்தின் இருபுறமும் மின்விளக்குகள் பொருத்தப்படாததால், வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, கிராம மக்கள் கூறியதாவது:
இரவு நேரங்களில் இருண்டு கிடக்கும் பாலத்தின் வழியாக அச்சத்துடன் சென்று வருகிறோம். மேம்பாலத்தின் ஓரங்களில் 'குடி'மகன்கள் மது அருந்துகின்றனர்.
இதனால், கல்லுாரி, பணிக்கு சென்று வரும் பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எனவே, பாலத்தின் இருபுறமும் மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

