/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரி மீது கார் மோதி விபத்து காரில் பயணித்த 9 பேர் படுகாயம்
/
லாரி மீது கார் மோதி விபத்து காரில் பயணித்த 9 பேர் படுகாயம்
லாரி மீது கார் மோதி விபத்து காரில் பயணித்த 9 பேர் படுகாயம்
லாரி மீது கார் மோதி விபத்து காரில் பயணித்த 9 பேர் படுகாயம்
ADDED : ஆக 18, 2025 01:24 AM

கும்மிடிப்பூண்டி:நின்றிருந்த லாரியின் பின்னால் கார் மோதிய விபத்தில், காரில் பயணித்த ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை, கோடம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் ஒன்பது பேர், நேற்று அதிகாலை சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம் கூடூர் நோக்கி, 'மாருதி சுசுகி ஈக்கோ' காரில் சென்று கொண்டிருந்தனர். நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கமலேஷ், 23, என்பவர் காரை ஓட்டினார்.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடியில் இடதுபுறம் திரும்ப வேண்டிய கார் நேராக சென்றதால், சாலையில் நின்றிருந்த லாரி மீது வேகமாக மோதியது.
காருடன் சிக்கியிருந்த ஓட்டுநரை, கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இந்த விபத்தில், கமலேஷ், சேகர், 55, கிரண், 31, ரமா, 40, சீனு, 35, சீமா, 27, லட்சுமி, 50, கீர்த்திகா, 18, தனுஸ்ரீ, 6, ஆகிய ஒன்பது பேரும் படுகாயமடைந்தனர்.
அனைவருக்கும் எளாவூர் சோதனைச்சாவடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எச்சரிக்கை இல்லை எளாவூர் சோதனைச்சாவடிக்கு முன், இடதுபுறம் திரும்ப வேண்டிய கார் நேராக சென்றதால் விபத்து ஏற்பட்டது.
நேராக செல்லும் சாலையில் தடுப்பு மட்டுமே வைக்கப்பட்டுள்ள நிலையில், சாலை திருப்பம் உள்ளதை முன்கூட்டியே எச்சரிக்கும் ஒளிரும் அறிவிப்பு பலகை போதிய அளவில் வைக்கப்படவில்லை.
குறைந்தது, 300 மீட்டர் தொலைவில் இருந்து இடதுபுறம் சாலை பிரிவதற்கான ஒளிரும் எச்சரிக்கை பலகைகளை போதிய இடைவெளியில் வைத்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது.
இதுபோன்று ஏராளமான விபத்துகள் அடிக்கடி அரங்கேறி வருவதால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரிதமாக செயல்பட்டு, அப்பகுதியில் ஒளிரும் அறிவிப்பு பலகைகளை வைத்து, வாகன ஓட்டிகளை எச்சரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.