'டீசல் விலை ஏறிப்போச்சு பழைய கட்டணம் கட்டுபடி ஆகாது': பஸ் கட்டணத்தை உயர்த்த தனியார் உரிமையாளர்கள் கோரிக்கை
'டீசல் விலை ஏறிப்போச்சு பழைய கட்டணம் கட்டுபடி ஆகாது': பஸ் கட்டணத்தை உயர்த்த தனியார் உரிமையாளர்கள் கோரிக்கை
ADDED : அக் 12, 2025 04:50 AM

சென்னை: தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்வு குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை, அரசிடம் ஆறு மாதங்களாக கிடப்பில் இருக்கிறது. இனியும் தாமதிக்காமல், எரிபொருள் செலவுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, தனியார் பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, தினமும் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
டீசல் விலை, சுங்கச் சாவடி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மனு தாக்கல் அரசு போக்குவரத்து கழகங்களின் தினசரி வருவாய், 39.3 கோடி ரூபாய்; செலவு 57.68 கோடி ரூபாயாக இருக்கிறது; நிதி பற்றாக்குறை 18.65 கோடி ரூபாயாக உள்ளது.
இதேபோல், தமிழகம் முழுதும், 4,700 தனியார் பஸ்களும் தற்போதுள்ள கட்டணத்தில் தான் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியம், பெண்கள் இலவச பயணம் சலுகை கட்டணத்தை, அரசு ஈடுகட்டுகிறது. ஆனால், இதுபோன்ற சலுகைகள், தனியார் பஸ்களுக்கு கிடைப்பதில்லை.
இதற்கிடையே, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், 'உயர் நீதிமன்றத்தில் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பயணியர் பஸ் கட்டணத்தை உயர்த்த, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, ஜனவரியில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவது குறித்து, நான்கு மாதங்களுக்குள் தகுந்த முடிவு எடுத்து அரசு அறிவிக்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுப்படி, மே மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும்.
ஆனால், இன்னும் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யவில்லை. தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், பஸ் கட்டண உயர்வை தவிர்க்க, அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
40 சதவீதம் இது குறித்து, தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர் கள் சம்மேளனச் செயலர் தர்மராஜ் கூறியதாவது:
தமிழகத்தில், 2018ல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. 2018ல், தமிழக அரசு டிக்கெட் கட்டணத்தை நிர்ணயம் செய்தது. அப்போது, லிட்டர் டீசல் விலை 63 ரூபாய். தற்போது, 93 ரூபாயாக உள்ளது. அதுபோல், உதிரி பொருட்களின் விலையும், 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
தனியார் பஸ்களை பொறுத்தவரையில், 60 சதவீத வழித்தடங்களில், இழப்பு தான் ஏற்படுகிறது. எங்களால் இழப்பை சரி செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறோம்.
நீதிமன்றம் உத்தரவில் அமைக்கப்பட்ட குழு அறிக்கையையும், தமிழக அரசு இன்னும் இறுதி செய்யாமல், பல காரணங்களை கூறி தாமதித்து வருவது கவலை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நீதிமன்றம் உத்தரவில், அரசு போக்குவரத்து கழகங்கள், பஸ் உரிமையாளர்கள், பயணியர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாய், செலவு மற்றும் வருவாய் பெருக்குவதற்கான வாய்ப்பு குறித்த விபரங்களை சேகரித்து, தமிழக அரசிடம் அளித்துள்ளோம்.
இந்த கருத்துகளை தொகுத்து, தமிழக அரசு சார் பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதையடுத்து, பஸ் கட்டணம் மாற்றியமைப்பது குறித்து தெரியவரும். தமிழகத்தில் தேர்தல் நெருங்கவுள்ளதால், அரசு பஸ்களில் கட்டண உயர்வுக்கு வாய்ப்பு குறைவு. தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வு குறித்து, தமிழக அரசே இறுதி முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.