/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
/
விடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
விடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
விடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்
ADDED : ஜூலை 17, 2025 02:03 AM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் விடுப்பட்ட மாற்றுத்திறனாளிகள் குறித்து தனியார் தொண்டு நிறுவனம் மூலம் கணக்கெடுக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. அடையாள அட்டை, அரசு நலத்திட்ட உதவிகள் பெற்று தருவதற்கு மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் சார்ந்த பராமரிப்பு, மறுவாழ்வு சேவைகள், நடமாடும் சிகிச்சை வாகனம் மூலம் சேவை செய்வதற்கும் அரசு நலத்திட்ட உதவிகள் பெற்று தருவதற்கும், உலக வங்கியின் மூலம், 1,700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் என ஏற்படுத்தி, தனியார் தொண்டு நிறுவனம் மூலம், விடுப்பட்ட மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் என்பது குறித்து கடந்த 10 நாட்களாக முன்களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து வருகின்றனர்.
அமர்சேவா சங்கம் தொண்டு நிறுவனம் சார்பில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றியங்களில், 250 முன்களப்பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணிகளை கண்காணிக்க மூன்று மாவட்ட திட்ட அலுவலர்கள், 19 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கணக்கெடுப்பால் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்யாதவர்கள் எத்தனை பேர் என கண்டறிலாம். அவர்களுக்கு அடையாள அட்டை, அரசு நலதிட்ட உதவிகள் பெற்று தருவது, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பெயர்களை பதிவு செய்வது போன்ற பணிகளில் முன்களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் சீனிவாசன் கூறியதாவது:
மாவட்டத்தில், 45,850 மாற்றுத்திறனாளிகள் மட்டுமே மாவட்ட அலுவலகத்தில் பெயர்களை பதிவு செய்து உள்ளனர். இவர்கள் அரசு நலதிட்ட உதவிகள் பெறுகின்றனர். பல கிராமங்களில் மாற்றுத்திறனாளிகள் அரசு நலதிட்ட உதவிகள், அடையாள அட்டை பெறாமல் உள்ளனர்.
உலக வங்கி நிதியுதவியுடன், மாவட்டத்தில், விடுப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்து தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மாற்றுத்திறனாளிகள் விபரம் சேகரித்து பதிவேட்டிலும், ஆன்-லைனில் பதிவு செய்யும் பணிகள் நடக்கிறது. இப்பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
கணக்கெடுப்புக்கு பின்பு, திருத்தணி, திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ஆகிய மூன்று இடங்களில் ஒருங்கிணைந்த சேவை மையம், 19 இடங்களில் ஓரிட சேவை மையம் ஏற்படுத்தியும், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவதற்கு வசதி செய்யப்படும்.
இதுவிர, நடமாடும் வாகனம் மூலம் மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கே நேரில் சென்று அவர்களுக்கு, சிறப்பு ஆசிரியர் மூலம் ஆலோசனைகள், தசைபயிற்சி ஆசிரியர் மூலம் பிசியோதரப்பி, மருத்துவ சேவை வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.