/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாஸ்த்ரா செஸ் போட்டி சென்னை வீரர் முதலிடம்
/
சாஸ்த்ரா செஸ் போட்டி சென்னை வீரர் முதலிடம்
ADDED : நவ 28, 2025 03:31 AM

சென்னை: சென்னையில் நடந்த சாஸ்த்ரா தேசிய செஸ் போட்டியில், சென்னை கிஷோர் உட்பட தமிழகத்தின் வீரர் - வீராங்கனையர், முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர்.
மெட்ராஸ் ஐ.ஐ.டி., மற்றும் தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், முதலாவது 'தேசிய சாஸ்த்ரா செஸ் சாம்பியன்ஷிப் - 2025' போட்டி, சென்னை அடையாறில் உள்ள மெட்ராஸ் ஐ.ஐ.டி., வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
நாட்டின் நட்சத்திர வீரர் - வீராங்கனையர் 100க்கும் மேற்பட்டோர், பல்வேறு வயது பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்களும் இடம் பெற்றிருந்தனர்.
போட்டி, 'சுவிஸ்' முறையில் எட்டு சுற்றுகளாக 90 + 30 நிமிடங்களில் நடந்தது. ஆண்களில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த சென்னையின் கிஷோர், 13, மொத்த ரேட்டிங்கில் 1,978 பெற்று ஏழு புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.
அதே வயது பிரிவில் பங்கேற்ற, அசாம் மாநிலத்தின் ஜெகஜித் சிங்ஹா, 13, மொத்த ரேட்டிங்கில் 1,943 பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
வயது 14க்கு உட்பட்ட, ரேட்டிங் 1,801 முதல் 2,000 வரை உள்ள பிரிவில், தமிழகத்தின் 12 வயதுடைய விஸ்ரூத், 1,940 புள்ளிகள்; 1,601 முதல் 1,800 வரை உள்ளோர் பிரிவில் கேரளாவின் 14 வயதுடைய அபினவ், 1,777 புள்ளிகள்; 1,401 முதல் 1,600 வரை உள்ள பிரிவில் பீஹாரின் 14 வயதுடைய அனுபவ் மிஷ்ரா, 1,497 புள்ளிகள் பெற்று, முதலிடம் பிடித்து அசத்தினர்.
தொடர்ந்து, வெட்ரன் 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், தமிழகத்தின் 65 வயதுடைய கணேஷன், 1,744 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஒவ்வொரு சுற்றிலும் முதலிடம் பெற்ற போட்டியாளருக்கு 60,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

