/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவாபுரி முருகன் கோவில் ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர்...உத்தரவு: தரிசனத்திற்கு பின் பக்தர்கள் வெளியேற மாற்று வழிக்கும் ஆலோசனை
/
சிறுவாபுரி முருகன் கோவில் ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர்...உத்தரவு: தரிசனத்திற்கு பின் பக்தர்கள் வெளியேற மாற்று வழிக்கும் ஆலோசனை
சிறுவாபுரி முருகன் கோவில் ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர்...உத்தரவு: தரிசனத்திற்கு பின் பக்தர்கள் வெளியேற மாற்று வழிக்கும் ஆலோசனை
சிறுவாபுரி முருகன் கோவில் ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர்...உத்தரவு: தரிசனத்திற்கு பின் பக்தர்கள் வெளியேற மாற்று வழிக்கும் ஆலோசனை
ADDED : ஏப் 05, 2025 10:23 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க, கோவில் முன் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பக்தர்கள் தரிசனம் முடிந்ததும், பின் வாயில் வழியாக வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் எனவும், கோவில் நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் சிறுவாபுரியில், பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை, 50,000 - 2,00,000 பக்தர்கள், வார விடுமுறை நாட்களில், 20,000 மற்றும் மற்ற நாட்களில், 10,000 பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கோவில் அமைந்துள்ள சிறுவாபுரி கிராம சாலை மிகவும் குறுகியதாக அமைந்துள்ளது. கோவில் முன், 100க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, செவ்வாய் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனம் நிறுத்த தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அதிகப்படியாக வரும் வாகனங்களால், இடவசதியின்றி சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், பக்தர்கள் நடந்து செல்ல கூட முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புறவழிச் சாலை திட்டம் அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும், அதுவரை ஏற்படவுள்ள நெரிசலை குறைக்கும் வகையில், மாற்று ஏற்பாடு செய்து கொடுப்பதற்கான வருவாய், காவல், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் முன்னிலையில் நேற்று நடந்தது.
இதில், கலெக்டர் பிரதாப் பேசியதாவது:
சிறுவாபுரி முருகன் கோவிலில், கட்டண தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நிழற்பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல், இலவச தரிசன பக்தர்களுக்கும், வெயில் படாமல் இருக்க நிழற்பந்தல் கண்டிப்பாக அமைக்க வேண்டும்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். வரிசையில் வரும் பக்தர்கள், விரைவில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் கூடுதல் பணியாட்களை நியமிக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், முதியோர், குழந்தை வைத்திருப்போர் மற்றும் கர்ப்பிணியர் செல்ல தனி வழி ஏற்படுத்த, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெயில் காலத்தில் தீ விபத்து ஏற்படுவதை கருத்தில் கொண்டு, கோவிலுக்குள் நெய் தீபம் ஏற்றுவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
மேலும், கோவிலுக்குள் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதை தவிர்க்க வேண்டும். வி.ஐ.பி., தரிசனத்திற்கு தனி வழி அமைக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த, கோவில் நிர்வாகம் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும்.ஹ
ஊழியர்கள், துப்புரவு ஊழியர் மற்றும் வாட்ச்மேன்களை அதிகப்படுத்தி, கோவில் வளாகத்தை துாய்மையாக பராமரிக்க வேண்டும். கோவிலை சுற்றி பூமாலை, காய்கறி கடை வைத்து சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது.
எனவே, கோவில் முன் உள்ள கடைகளை நிர்வாகத்தினர் அகற்ற வேண்டும். மேலும், செவ்வாய், ஞாயிற்றுக்கிழமையில், கோவிலுக்கு அருகில் உள்ள கடைகளில் நெய் தீபம், கற்பூரம், தேங்காய் போன்ற பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.
சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அனைவரும், ராஜகோபுரம் நுழைவாயில் வழியாக சென்று, அதே வழியில் திரும்புகின்றனர். இம்முறையை மாற்றி, தரிசனம் முடிந்ததும், பக்தர்கள் கோவிலுக்கு வெளிப்புறமாக செல்ல மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், ஹிந்து அறநிலைய துறை வேலூர் மண்டல இணை ஆணையர் அனிதா, பொன்னேரி கோட்டாட்சியர் கனிமொழி, பொன்னேரி தாசில்தார் சோமசுந்தரம், கோயில் செயல் அலுவலர் மாதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.