/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
/
திருத்தணி கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
ADDED : நவ 03, 2024 01:57 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு மறுநாள் முதல், கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று கந்த சஷ்டி விழா துவங்கியது.
இதையொட்டி அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
காலை 8:00 மணிக்கு, உற்சவர் சண்முகர் சிறப்பு அலங்காரத்தில், மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் எழுந்தருளினார். பின், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் பங்கேற்று லட்சார்ச்சனை விழாவை துவக்கி வைத்தனர்.
லட்சார்ச்சனைக்கு கட்டணம் செலுத்திய பக்தர்கள் மட்டும், காவடி மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டு, உற்சவருக்கு லட்சார் ச்சனை நடத்தப்பட்டது. மற்ற பக்தர்கள் காவடி மண்டபத்தில் அமர்ந்து, லட்சார்ச்சனையை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இன்று மூலவருக்கு பட்டு, நாளை 4ம் தேதி தங்ககவசம், 5ம் தேதி திருவாபரணம், 6ம் தேதி மூலவருக்கு வெள்ளி கவச அலங்காரம், 7ம் தேதி காலை சந்தன காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை, 6:00 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலியும், மறுநாள் 8ம் தேதி காலை 10:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது.
ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி கோவிலில் முருகப்பெருமான் சினம் தணிந்த இடம் என்பதால், சூரசம்ஹாரத்திற்கு பதிலாக புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடதக்கது.