/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
/
திருத்தணி கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
ADDED : நவ 03, 2024 02:06 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் தீபாவளி நோன்பு மறுநாள் முதல், கந்த சஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று கந்த சஷ்டி விழா துவங்கியது. இதையொட்டி அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
காலை 8:00 மணிக்கு, உற்சவர் சண்முகர் சிறப்பு அலங்காரத்தில், மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் எழுந்தருளினார். பின், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர் பங்கேற்று லட்சார்ச்சனை விழாவை துவக்கி வைத்தனர்.
லட்சார்ச்சனைக்கு கட்ட ணம் செலுத்திய பக்தர்கள் மட்டும், காவடி மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டு, உற்சவருக்குலட்சார்ச்சனை நடத்தப்பட்டது. மற்ற பக்தர்கள் காவடி மண்டபத்தில் அமர்ந்து, லட்சார்ச்சனையை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இன்று மூலவருக்கு பட்டு, நாளை 4ம் தேதி தங்ககவசம், 5ம் தேதி திருவாபரணம், 6ம் தேதி மூலவருக்கு வெள்ளி கவச அலங்காரம், 7ம் தேதி காலை சந்தன காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை, 6:00 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலியும், மறுநாள் 8ம் தேதி காலை 10:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது.
ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி கோவிலில் முருகப்பெருமான் சினம் தணிந்த இடம் என்பதால், சூரசம்ஹாரத்திற்கு பதிலாக புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான, கோட்டா ஆறுமுகசுவாமி கோவில் நந்தி ஆற்றின்கரையோரம் உள்ளது. இக்கோவிலில், 11ம் ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று காலை துவங்கியது. இன்று மூலவருக்கு பட்டு, 4ம் தேதி தங்ககவசம், 5ம் தேதி திருவாபரணம், 6ம் தேதி வெள்ளி கவசம் போன்ற அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது.
கரகண்டீஸ்வரர் கோவில்
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், நகரி டவுனில் உள்ள கரகண்டீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர் சுவாமி சன்னதியில், கந்தசஷ்டி விழா நேற்று முன்தினம்துவங்கியது.
வரும், 7ம் தேதி மாலையில் கந்தசஷ்டியின் ஆறாம் நாளில், சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
மறுநாள் நண்பகலில் உற்சவர் சுப்ரமணியர் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மங்கள ஈஸ்வரர் கோவில்: கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட மணவாளநகர் மங்கள ஈஸ்வர உடனுறை மங்கள ஈஸ்வரர் கோவிலில் 29 ம் ஆண்டு கந்த சஷ்டி லட்சார்ச்சனை திருவிழா, நேற்று முன் தினம் கணபதி ேஹாமம், கலச ஸ்தாபனம், அர்ச்சனையுடன் துவங்கியது. வரும் 7ம் தேதி வரை தினமும் காலை 8:00 மணி மற்றும் மாலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்லட்சார்ச்சனை நடை பெறும்.
வரும் 7ம் தேதி மாலை 7:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறும். 8ம் தேதி மாலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை, வள்ளி, தேவசேனா சமேத மங்கள சுப்பிரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து திருமண விருந்து நடைபெறும்.
கும்மிடிப்பூண்டி
திருவள்ளூர் மாவட்டம், சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. செவ்வாய், ஞாயிறு, விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிறுவா புரி முருகனை தரிசிக்க வருவர். பிரசித்தி பெற்ற இத்திருத்தலத்தில் கொடியேற்றத்துடன், நேற்று மஹா கந்த சஷ்டி உற்சவம்துவங்கியது.