/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசஸ்தலை ஆற்றின் கரைகளில் உடைப்பை தடுக்க கான்கிரீட் கற்கள்
/
கொசஸ்தலை ஆற்றின் கரைகளில் உடைப்பை தடுக்க கான்கிரீட் கற்கள்
கொசஸ்தலை ஆற்றின் கரைகளில் உடைப்பை தடுக்க கான்கிரீட் கற்கள்
கொசஸ்தலை ஆற்றின் கரைகளில் உடைப்பை தடுக்க கான்கிரீட் கற்கள்
ADDED : செப் 28, 2024 01:37 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த நாலுார் கம்மார்பாளையம், வன்னிப்பாக்கம், பெரிய மடியூர், கண்ணியம்பாளையம் ஆகிய கிராமங்கள் வழியாக கொசஸ்தலை ஆறு பயணிக்கிறது.
இந்த கிராமங்களில், ஆற்றின் கரைகள் பலவீனமாக இருந்ததால், கடந்தாண்டு வெள்ளப்பெருக்கின்போது மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால், கரைகள் உடைந்து மழைநீர் கிராமங்களுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, அங்கு தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி வைத்து, உடைப்பு ஏற்படுவது தற்காலிகமாக தடுக்கப்பட்டது. பலவீனமாகி, உடைப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, தற்போது கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.
நாலுார் கம்மார்பாளையம் கிராமத்தில், 280 மீ., நீளம், 5 மீ., உயரத்தில் கான்கிரீட் சுவர் அமைத்து, கரைகளின் சரிவுகளில் கான்கீரிட் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளது.
அதே பகுதியில் ஆற்றிற்கு மழைநீர் வரும் கால்வாயில் ஷட்டர் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன. மற்ற பகுதிகளிலும் கரை சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நீர்வளத் துறையினர் தெரிவித்தனர்.