/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.110 கோடி குடிநீர் திட்ட பணிகளை முடிக்க கெடு... ஜன., 15!: வாரிய அதிகாரிகளுக்கு நகராட்சி கிடுக்கிப்பிடி
/
ரூ.110 கோடி குடிநீர் திட்ட பணிகளை முடிக்க கெடு... ஜன., 15!: வாரிய அதிகாரிகளுக்கு நகராட்சி கிடுக்கிப்பிடி
ரூ.110 கோடி குடிநீர் திட்ட பணிகளை முடிக்க கெடு... ஜன., 15!: வாரிய அதிகாரிகளுக்கு நகராட்சி கிடுக்கிப்பிடி
ரூ.110 கோடி குடிநீர் திட்ட பணிகளை முடிக்க கெடு... ஜன., 15!: வாரிய அதிகாரிகளுக்கு நகராட்சி கிடுக்கிப்பிடி
ADDED : டிச 30, 2024 01:16 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, 110 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் பணிகளை, அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு, நகராட்சி நிர்வாகம் கெடு விதித்துள்ளது. அதை மீறினால், அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியின் 21 வார்டுகளில், 14,000 குடும்பங்களில் 50,000 பேர் உள்ளனர். ஒரு நபருக்கு, ஒரு நாளைக்கு, 90 லிட்டர் குடிநீர் வீதம், 45 லட்சம் லிட்டர் குடிநீர் நகராட்சிக்கு தேவைப்படுகிறது.
குடிநீர் பிரச்னை
தற்போது, அரக்கோணம் கூட்டுக் குடிநீர், அருங்குளம் கொசஸ்தலை ஆற்றில் மூன்று கிணறுகள் மற்றும் நகராட்சியில் போடப்பட்டுள்ள 30 ஆழ்துளை கிணறுகளில் இருந்து ஒரு நாளைக்கு, 20 - 30 லட்சம் லிட்டர் மட்டுமே பெறப்படுகிறது.
இதனால், மழைக்காலத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தெருக் குழாயில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோடைக்காலத்தில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்குவதால், திருத்தணியில் கடும் குடிநீர் பிரச்னை இருந்தது.
இந்நிலையில், 2020ம் ஆண்டு, திருப்பாற்கடலில் இருந்து, திருத்தணி நகருக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வர அரசு 110 கோடி ரூபாயை ஒதுக்கியது. இதையடுத்து தமிழ்நாடு குடிநீர் வாரியம் பணிகளை துவங்கியது.
திருத்தணி சேகர்வர்மா நகரில், 3.60 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தேக்கும் நீர்ஊந்து நிலையம், இந்திரா நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து வார்டுகளிலும் குழாய்கள் புதைக்கும் பணிகள் நிறைவடைந்து, கூட்டுக் குடிநீர் வினியோகம் செய்து, தண்ணீர் கசிவு பணிகள் சரி பார்க்கப்பட்டு வருகின்றன. ஆனால், முழுமையாக பணிகள் நிறைவடைந்து, நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை.
அதிகாரிகள் உறுதி
இந்நிலையில், தமிழ்நாடு குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் நகராட்சி கமிஷனர், பொறியாளர், பணி மேற்பார்வையாளர் ஆகியோர் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தை சமீபத்தில் நடத்தினர்.
அதில், இம்மாதத்திற்குள் குடிநீர் வாரிய பணிகள் நிறைவு பெற்று, நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என, வாரிய அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
ஆனால், பணிகள் முழுமை பெறாமல் உள்ளதால், குடிநீர் வாரிய அதிகாரிகள் மீண்டும் அவகாசம் கேட்டுள்ளது. இதனால், குடிநீர் பணிகள் முடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழ்நாடு குடிநீர் வாரியம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள், 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 21 வார்டுகளில், 15ல் கூட்டுக் குடிநீர் சோதனை ஓட்டம் முடிந்துள்ளது.
மீதமுள்ள ஆறு வார்டுகளில், சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு இடங்களில் குழாய் சேதம் மற்றும் தண்ணீர் கசிவு உள்ளதை, குடிநீர் வாரிய அதிகாரிகள் சரி செய்து வருகின்றனர்.
மேலும், அவகாசம் கேட்டுள்ளதால் வரும், ஜன., 15ம் தேதிக்குள் பணிகள் முழுமையாக முடித்து, நகராட்சிக்கு ஒப்படைக்க கெடு விதித்துள்ளோம். தவறும்பட்சத்தில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.