/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.5.70 கோடியில் மழைநீர் சேகரிப்பு மையமாக மாறும் ஆழ்துளை கிணறுகள்
/
ரூ.5.70 கோடியில் மழைநீர் சேகரிப்பு மையமாக மாறும் ஆழ்துளை கிணறுகள்
ரூ.5.70 கோடியில் மழைநீர் சேகரிப்பு மையமாக மாறும் ஆழ்துளை கிணறுகள்
ரூ.5.70 கோடியில் மழைநீர் சேகரிப்பு மையமாக மாறும் ஆழ்துளை கிணறுகள்
ADDED : செப் 25, 2025 01:49 AM

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த, 100 நாள் வேலை திட்டத்தில், 1,001 ஆழ்துளை கிணறுகள், 5.70 கோடி ரூபாயில் மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் முழுதும், 20 ஆண்டுகளுக்கு முன், தலா 56,000 ரூபாய் மதிப்பில், 3,200 ஆழ்துளை கிணறு குடிநீர் கைப்பம்புகள், 17.92 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டன.
இதில், 3,000க்கும் மேற்பட்ட குடிநீர் கைப்பம்புகள் பழுதடைந்து காட்சி பொருளாகவும், செடிகள் வளர்ந்தும் மாயமாகி வருகின்றன.
புதிய முயற்சி தற்போது, கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, ஊரக வளர்ச்சித் துறையினர் மாவட்டம் முழுதும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க புதிய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை, 'ரீசார்ஜ் ஷாப்ட்' எனப்படும் மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றும் பணி நடந்து வருகிறது.
ஆழ்துளை கிணறு அமைந்துள்ள பகுதியை சுற்றி, 2 - 15 மீட்டர் வரை விட்டம் கொண்ட பகுதியாக உருவாக்கப்படும். இந்த கட்டமைப்புக்குள் துளையிடப்பட்ட குழாய்கள் பதிக்கப்பட்டு, சரிவை தடுக்கும் வகையில் ஜல்லிக் கற்கள், மணல் கொட்டப்படும்.
தற்போது முதற்கட்டமாக, 'திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களிலும், தலா 57,000 ரூபாய் மதிப்பில், 1,001 ஆழ்துளை கிணறுகள், மொத்தம் 5.70 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது.
'வரும் காலங்களில் மீதமுள்ள பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளும் மாற்றப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.