சொத்து வரி செலுத்தாதோரின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு! வருவாய் இழப்பை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை
சொத்து வரி செலுத்தாதோரின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு! வருவாய் இழப்பை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை
UPDATED : ஜூலை 28, 2026 06:33 AM
ADDED : ஜூலை 27, 2026 07:52 PM
திருத்தணி : திருத்தணி நகராட்சியில், சொத்து வரி செலுத்தாமல் இழுத்தடித்த, 200 வீடுகளின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நகராட்சியின் வருவாய் இழப்பீட்டை தவிர்க்கவும், வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கும், சொத்து வரி செலுத்தும் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புக்கு முன்வைப்பு தொகை, குடிநீர் கட்டணம் வசூலிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 13,967 பேர் சொத்து வரியும், 2,794 பேர் காலிமனை வரியும், 1,392 பேர் தொழில் வரியும், 3,155 பேர் குடிநீர் வரியும் செலுத்தி வர்டுகின்றனர்.
நகராட்சியின் கடைகளுக்கு, 156 பேர் வாடகையும், 13,715 பேர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு சர்வீஸ் கட்டணமும் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், ஆண்டுக்கு 8.25 கோடி ரூபாயை நகராட்சி நிர்வாகம் வசூலிக்கிறது.
இந்த நிதியின் மூலம், நகராட்சி மக்களின் குடிநீர், கால்வாய், மின் விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
இந்நிலையில், நகராட்சியில் பலர் வீடு, வணிக வளாகங்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி செலுத்தாமல் உள்ளனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், நகராட்சி நிர்வாகம் புதிதாக வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் கட்டியவர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் வரி செலுத்தாதவர்கள் குறித்து, நகராட்சி நிர்வாகம் வருவாய் ஆய்வாளர் தலைமையில் கணக்கெடுத்த போது, 3,000 வீடுகளுக்கு மேல் இதுவரை சொத்து வரி செலுத்தாதது தெரிய வந்தது.
அதே போல், காலிமனை வரியும் செலுத்தாமல் உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் உடனடியாக வீடுகளுக்கு புதிதாக சொத்து வரி வசூலித்து வருகின்றனர். இதனால், ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம், 75 லட்சம் ரூபாய் நகராட்சிக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டு வருகிறது.
இதுதவிர, திருப்பாற்கடல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ், மொத்தம் 10,890 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் வசூலிக்காமல், நகராட்சி நிர்வாகம் சோதனை ஓட்டம் என்ற பெயரில் குடிநீர் வினியோகம் செய்து வந்தது. இதில், 3,155 பேர் மட்டுமே தற்போது குடிநீர் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
மீதமுள்ளவர்களுக்கு, முறையாக குடிநீர் இணைப்புக்கு முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும் எனவும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை, 150 ரூபாய் கட்ட வேண்டும் எனவும், வீடு வீடாக நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இருப்பினும், இதுவரை யாரும் சொத்து வரி கட்டவில்லை.
இதனால், குடிநீர் கட்டணமாக மட்டும், ஆண்டுக்கு 4.63 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சொத்து வரியாக 75 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்படுவதால், மின் கட்டணம், பராமரிப்பு போன்ற செலவுகளுக்கு பணம் இல்லாமல், நகராட்சி நிர்வாகம் திண்டாடி வருகிறது.
இந்நிலையில், சொத்து வரி செலுத்தும் அனைத்து வீடுகளுக்கும், குடிநீர் இணைப்பு முன் வைப்பு தொகை, மாத கட்டணம் வசூலிக்க தீர்மானித்து, அதற்கான பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து, திருத்தணி நகராட்சி கமிஷனர் கன்னியப்பன் கூறியதாவது:
திருப்பாற்கடல் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வந்து, நகராட்சியில் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக, மின் கட்டணம், பராமரிப்பு செலவு மற்றும் மின் மோட்டார், குழாய் இணைப்பு பழுது என, பல லட்சம் ரூபாய் செலவிட வேண்டியுள்ளது.
ஆகையால், குடிநீர் இணைப்பு உள்ள வீடுகள் சொத்து வரி செலுத்தினால் மட்டுமே, குடிநீர் இணைப்புக்கு முன் வைப்பு தொகை, குடிநீர் கட்டணம் வசூலிக்க முடியும்.
எனவே, சொத்து வரி செலுத்தாத வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கி, வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டித்து வருகிறோம்.
அந்த வகையில், ஒரு மாதத்தில், 200 வீடுகளின் குடிநீர் இணைப்புகளை துண்டித்துள்ளோம். மேலும் வரி செலுத்த தயக்கம் காட்டினால் ஜப்தி, நீதிமன்ற வழக்கு தொடரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
