/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் அமைச்சர் முன்னிலையில் தி.மு.க., நிர்வாகிகள் கடும் மோதல்
/
திருத்தணியில் அமைச்சர் முன்னிலையில் தி.மு.க., நிர்வாகிகள் கடும் மோதல்
திருத்தணியில் அமைச்சர் முன்னிலையில் தி.மு.க., நிர்வாகிகள் கடும் மோதல்
திருத்தணியில் அமைச்சர் முன்னிலையில் தி.மு.க., நிர்வாகிகள் கடும் மோதல்
ADDED : ஆக 04, 2025 11:01 PM

திருத்தணி,திருத்தணியில், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் நாசர் முன்னிலையில், நகர கட்சி நிர்வாகிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, அமைச்சர் இரு தரப்பினரையும் சமரசம் செய்து, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
திருத்தணி ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்தில், உணவுத்துறை வாயிலாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது.
இதில் பங்கேற்க, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், திருத்தணி நகருக்கு வந்தார். அப்போது, அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே, அமைச்சரை முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பூபதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
அப்போது, தி.மு.க., திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலரும், திருத்தணி எம்.எல்.ஏ.,வுமான சந்திரனும் அமைச்சருடன் வந்தார்.
அப்போது, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பூபதியின் ஆதரவாளர்களும், கட்சி நிர்வாகிகளும், திருத்தணியில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகள் குறித்து, நகர செயலர் வினோத்குமார் தகவல் தெரிவிப்பதில்லை என, குற்றம் சாட்டினர்.
அதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அமைச்சர் தலையிட்டு, தற்போதைய மாவட்ட செயலர் சந்திரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பூபதி ஆகியோரை மட்டும், மண்டபத்தில் உள்ள தனி அறைக்கு அழைத்து சென்று பேசினார்.
அதன் பின், வெளியே வந்த அமைச்சரிடம், பூபதியின் ஆதரவாளரும் மாவட்ட பிரதிநிதியுமான மோகன்ராவ் மற்றும் கட்சி நிர்வாகிகள், மீண்டும் பிரச்னையை கிளப்பினர். மேலும், நகர செயலர் வினோத்குமாரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் இரு தரப்பினரையும் சமரசம் செய்த அமைச்சர், அதன் பின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.
திருத்தணியில், ஏற்கனவே முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பூபதி மற்றும் திருத்தணி எம்.எல்.ஏ.,வும் மாவட்ட செயலருமான சந்திரன் ஆதரவாளர்களுக்கு இடையே பனிப்போர் இருந்த நிலையில், நேற்று அமைச்சர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம், திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.,வில் உள்ள கோஷ்டி மோதலை வெட்ட வெளிச்சமாக்கியது.